Thursday, March 1, 2012

சாதித்துவிட்டார் நம் ஷஹபாத்-By Sridhar

சாதித்துவிட்டார்  நம் ஷஹபாத்
ஆம் என்னால் இவரை  இப்படித்தான் சொல்லி வாயார பாராட்ட முடியும்.
தனி மரம்  தோப்பாகாது  என்று மரங்களை பார்த்து சொல்லும் ஒரு பழமொழி  உண்டு.

ஆனால் அதே ஒரு  தனி மனித சாதனைக்கு இதில் விதி விலக்கும் உண்டு.
அப்படி செய்யும் ஓர் மாபெரும் சாதனையாளரை வேறு என்ன சொல்லி அழைக்க  முடியும்

சாதனை செய்து விட்டார்  நமது ராம கிருஷ்ணன் சார் அவர்கள் என்பதை தவிர.

நெ 44  மஹாதான தெருவில் வசித்தவர்  . 1950  - களில் நமது பள்ளியில் படித்த மாணவர். படித்த பின்னர் மத்திய அரசின் வானிலை  துறையில்  ஒரு அதிகாரியாக வேலை பார்த்து  ஓய்வு பெற்றவர். பழைய மாணவர் என்ற முறையில் தோசாவின் மூலம்  நம் அனைவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம்.  அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக  நம்மில் பலருடன்  நெருங்கிய  பழக்கம்.

நெருங்கி பழகிய பின்னர்தான்  தெரிகிறது  மனிதருக்கு  எத்தனை  எத்தனை முகங்கள் என்று. தனது ஒய்வு காலத்தை   எவ்வாறு  பிரித்து வைத்து கொண்டு எப்படியெல்லாம் இயங்குகிறார் என்று.
மஹாகவி  பாரதி சொன்ன " இமை பொழுதும்  சோராதிருத்தல்" என்னும் வார்த்தை இவருக்கு முழுவதும் பொருந்தும்.

 தனது மக்கள் எல்லோரும் அமெரிக்காவில் குடியேறி விட்டதால் வருடத்தில் ஆறு மாதம் கலிபோர்னியாவில் வாசம் மீதி ஆறு மாதம் தாய் நாட்டில். இங்கு வந்தால் அதிகாலை அனைவருக்கும் யோகா வகுப்பு,  பிறகு ஸ்லோக வகுப்பு பின்னர்  தனியாக பிரத்யேக  காரியங்கள்  மேலும் மாலையில் ஆலையங்கள்  செல்லுதல்   என்று நாள் முழுவதும் பல்வேறு சேவைகளில்   எந்திரம் போல் இயங்குகிறார். நம்மில் பலருக்கு முதலில் கலிபோர்னியா ராமகிருஷ்ணன் என்றுதான் அறிமுகமானார்.

என்னிடம் முதலில் இவ்வாறு அறிமுகமானபோது முதலில் எனக்கு மனதில் ஒரு நெருடல் என்ன நம் வேர்களை மறந்து கலிபோர்னியா ராமகிருஷ்ணன்  என்ற பெயரோடு ஒரு அறிமுகம் என்று.

முதலில் நான் அவரை ஷஹபாத் ராமகிருஷ்ணன் சார் என்று அழைக்க ஆரம்பித்தேன். ( அவரது தாத்தாவின் பெயர் ஷஹபாத் விஸ்வநாத அய்யர் ). அவர்  மறுப்பேதும் சொல்லவில்லை  பிறகு மற்றவர்களும் அழைத்தனர்.  தற்பொழுது இதுதான் அவருடைய சாஸ்வதமான பெயர். 

இரண்டு வருடங்களாக தை பூசத்தின் போது நான் சென்னை தொலைக்காட்சியினரை அழைத்து வந்து தை பூசத்தினை படமெடுக்க சொல்ல போகிறேன். வானிலை இயக்குனர் திரு. ரமணனை அவர்களை அழைத்து வந்து நம் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி தர போகிறேன் என்று சொல்லி கொண்டே இருந்தார். நடக்கவில்லை. ஒரு நேரத்தில் நாங்கள் அவரை கேலி செய்ய ஆரம்பித்தோம். அவரும் சிரித்துக்கொண்டு ஒருவாறு சமாளித்து கொண்டே இருந்தார்.

கடந்த மாதம்  தானே புயல் தமிழ்நாட்டை தாக்க வந்த போது புயல் நிலவரம் குறித்து போன் செய்து அவரை சற்றே கிண்டலாக நீங்கள் திரு ரமணன் அவர்களிடம் கேட்டு சொல்லுமாறு    கேட்டோம்.

அப்போது தான் அவர் திடீரென்று ஒரு குண்டை எங்களை நோக்கி  போட்டார்.

ஏய் நான் திரு. ரமணனை நம் திருவிடைமருதூர் நிகழ்ச்சிக்கு சொல்லிவிட்டேன் அவரும் வருவதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். வரும் 21 / 01 / 2012 சனிக்கிழைமை நம் பள்ளியில் ஏற்பாடு தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டேன். நாம் அனைவரும் முதல் நாள் வெள்ளிகிழைமை  செல்கிறோம் நீ கண்டிப்பாக என்னுடன் வருகிறாய் என்று. அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார்.

சொன்னபடி திரு. ரமணன் அவர்கள், நம் தோசாவின்  தலைவர் திரு.  மூர்த்தி அவர்கள், செயலாளர் ராம்ஜி மற்றும் திரு ராமகிருஷ்ணன் சார் அவர்களுடன் நானும்   சென்னையிலிருந்து புறப்பட்டோம். வழியில் திரு ரமணன் அவர்களுக்கு பாண்டிசேரியிலும், கடலுரிலும்  அரசு அதிகாரிகளுடன் ஒரு நிகழ்ச்சி. புயல் பாதித்த கடலோர பகுதிகளை மற்றும் மீனவர்களையும் நேரில் பார்வையிட ஒரு ஏற்பாடு.

ரமணன் அவர்கள் புயல் வந்தால் எப்படி இருக்க வேண்டும் மக்களை எப்படி பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும், கால்நடைகளை எப்படி பாதுகாக்க வேண்டும். காற்று எப்படி வேகமாக வரும் புயலுக்கு பின்னர் வானிலை எப்படி இருக்கும் என்று மீனவர்களுக்கு சொல்லி கொடுத்தார்.

நாங்கள் பார்த்த அனைத்து கிராம மீனவர்களுமே திரு. ரமணன் அவர்களை ஒரு கடவுளின் துதுவராகதான்  பார்த்தனர்.  மீனவர்களில் பலர் திரு. ரமணனன் அவர்களை பார்த்து ஐயா நீங்கள் இந்த புயல் மிக வலுவானதாக இருக்கும் கூரைகள்   பிய்த்துகொண்டு போகும் என்று முன்னமேயே சொன்னீர்கள் அப்படித்தான் எங்களது வீட்டு கூரைகள்   பிய்த்துகொண்டு  போனது. அனைத்து மரங்களும் விழும் என்று சொன்னீர்கள். நீங்களே இதோ பார்க்கிரீகள்   மரங்கள்  அனைத்தும் விழுந்து கிடக்கின்றன. எங்களது படகுகள் அடித்து கொண்டு போய்விடும் என்றீர்கள் படகுகள்
அனைத்தும்  சுமார் ஒரு கிலோமீட்டர் துரம் சென்று விழுந்து கிடந்தது. எங்கள் அனைவரையும் நீங்கள் கடலோரத்திலிருந்து அப்பால் சென்று விடுங்கள் என்றீர்கள் நாங்கள் அனைவரும் சென்று விட்டோம்.

 உங்களால்தான் இந்த புயலில் உயிர் சேதம் மிக மிக குறைவு. உங்களை கும்பிடுகிறோம் ஐயா என்றார்கள். எங்கள் அனைவருக்கும் மனதில் மிக்க நெகிழ்ச்சி. பின்னர் திருவிடைமருதூர் நோக்கி பயணம்.

மறுநாள் காலை இரண்டு மணியளவில் நமது பள்ளியில் திரு. ரமணன் அவர்களின் நிகழ்ச்சி. சுமார் 1750  மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள். தலைமை ஆசிரியரும், பள்ளி நிர்வாகி திரு கோமதி நாயகம் அவர்களும் மிக அருமையாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

முதலில் திரு ரமணன் அவர்கள் வானிலை, மழை, மேகங்கள், காற்றழுத்தம், புயல் இவை குறித்து ஒரு ஒலி ஓளி காட்சியினை தத்ரூபமாக விளக்கினார். தானே புயல் காட்சிகளை படமெடுத்து விளக்கினார். அனைவருக்கும் மிக அருமையாக இருந்தது.

பின்னர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி சரியான பதில் கூறும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கபட்டது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கடைசியில் மாணவ மாணவிகள் திரு ரமணன் அவர்களிடமே நேரடியாக வானிலை குறித்து கேள்வி பதில் இருந்தது. பல மாணவ மாணவிகள் கேள்விகளை தொடுக்க அனைத்து கேள்விகளுக்கும் திரு ரமணன் அவர்கள் பதில்களை சொல்லி அனைவரையும் மகிழ்வித்தார்.
 
இதில் கூட நான் ஒரு முக்கியமான ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். பல கேள்விகளை கேட்ட மாணவ மாணவிகளுள் ஒரு மாணவி கேட்ட ஒரு கேள்வி திரு ராமணன் அவர்களின் மனதில் மிகுந்த நெகிழ்சியினை ஏற்படுத்தியது அவர் அந்த மாணவிக்கு மகிழ்ச்சியுடன் பதிலும் கூறினார்.  
 
அந்த மாணவியின் கேள்வி இதுதான்.
 
திரு ரமணன் சார் அவர்களே நீங்கள் வானிலை துறையில் படித்து டாக்டர் பட்டம் பெற்று இந்த மகத்தான சேவையினை செய்து எங்கள் முன் இருக்கிறீர்கள் இது போல் நானும் இந்த துறையில் சேர்ந்து சேவையினை செய்ய நான் என்ன படிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்குவீர்களா என்பதுதான் அந்த கேள்வி.
 
இதனை நான் முக்கியமாக குறிப்பிட காரணம் தற்காலத்தில் பெற்றோர்களும் சரி மாணவர்களும சரி நன்கு படித்து மேலை நாடுகளில் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் அங்கேயே தங்கி விடவேண்டும் என்பதுதான் நோக்கம்.
 
இதன் விளைவு அடிப்படை விஞ்ஞானம் படிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. அதனால் நம் நாட்டின் தேவை குறித்தோ சேவை குறித்தோ நினைப்பது கூட இல்லை. கேள்வி கேட்ட அந்த மாணவியின் எண்ணம் இதற்கு மாறாக உள்ளது.
 
இதனை நான் முடிப்பதற்கு முன்னர் ஒரு செய்தியினை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன். பகவத் கீதையில் ஒரு செய்தி வரும். எவர் ஒருவர் பிரிதி பலன் ஏதும் பார்க்காமல் எண்ணம் சொல் மற்றும் செயல் முதலியவைகளை பண்ணுகிரார்களோ அதற்கு பெயர் கர்ம யோகம் என்று பொருள் அவர்கள் கர்மயோகிகள் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார். இதையே நம் தமிழிலும் ஸ்ரீ குமரகுருபரர் தனது நீதி நெறி விளக்கப்பாடலில்
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
 
கர்ம யோகத்தை பாடலாக பாடுகிறார்.
 
ஆக நமது ராமகிருஷ்ணன் சாரும் திரு ரமணன் அவர்களும் ஒரு கர்ம யோகத்தையே செய்துள்ளனர்.

அன்று மாலையே அனைவரும் சென்னைக்கு பயணம் அனைவரும் வீடு திரும்பிய போது நடு இரவு சுமார் மணி மூன்று. வரும் வழியில் அனைவருக்கும் பேச்சினுடே ஒரு இனிமையான அளவளாவல். மறக்க முடியாத ஒரு மகானுபவம். இதனை சாதித்து காட்டிய பெருமை ஷஹபாத் அவர்களையே சேரும்

ஆக ஷஹபாத் அவர்களுக்கு ஒரு ஜே

ஸ்ரீதர்
9941892821

மேற்படி நிகழ்ச்சிக்கான போட்டோக்களை கீழ்கண்ட லிங்க் ல் காணலாம்

No comments:

Post a Comment