Saturday, January 4, 2014

பாகவதம்- கூர்மாவதாரம்



அன்பர் பாலன் பிரதோஷ மகிமையைப்பற்றி மிக அருமையாக எழுதியிருந்தார்.அவர் அனுமதியுடன் மேலும் தொடர விரும்புகிறேன்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அம்ருத மதனம் என்ற அத்தியாயத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது.பின்னனியைப்பார்ப்போம் 

தேவாசுரப்போராட்டத்தைப்பற்றி நாம் அறிவோம்.அசுரர்களின் கை தான் ஒங்கியிருந்தது அது போதாதென்று அசம்பாவித சம்பவமும் ஒன்றும் நிகழ்தது நம் துர்வாசமுநிவருக்கு அதிசயமான மலர்மாலை ஒன்று கிடைத்தது.அதை `இந்திரனுக்கு அளிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.காரணம் அவருக்கும்,பகவானுக்கும்தான் தெரியும்.இந்திரன் யானையின் மீது பவனி.இவரைக்கண்டு மரியாதைக்காக கூட இறங்கவில்லை.மேலும் இடது கையால் வாங்கினது மட்டுமில்லாமல்,தான் அணியாமல், யானையின் பிடரியில் போட்டான்.யானை தன பங்குக்கு மாலையை கீழே வீசி காலால் மிதித்து துவசம் செய்தது.

துர்வாசர் உடன் கோபம் கொண்டுஇந்திரனும்,மற்ற தேவர்களும் செல்வங்களையும் இழப்பார்கள்.தேவலோகம் இருண்டு போகும் என்று சாபம் இட்டார்.அப்படியே நடந்தது.ஆலோசனை கூட்டத்தின் முடிவின் படி பிரம்மாவிடம் முறையிட்டனர்.,பின் பகவானிடம் சரணடைந்தனர்.பகவான் "பயப்படவேண்டாம்.வழி உள்ளது.  மந்தர மலையை  மத்தாகவும்,வாசுகியை நாணாகவும் கட்டி பாற்கடலை கடைந்தால் அம்ருதம் வெளிப்படும்.அதை உண்டால் மரணம் கிடையாது.ஆனால் அதற்கு அசுரர்களின் உதவி தேவை.அவர்களிடம் தற்காலிகமாக சமாதானம் செய்து கொண்டு ஒத்துழைப்பை நாடுங்கள். நானும் எல்லா உதவிகளையும் செய்கிறேன் "என்றார்.

அதன்படி தேவர்கள் அசுர சக்கரவர்த்தி பலி  இடம் இனிமையாக பேசி சம்மதம் பெற்றனர்.பின் இரு பிரிவினரும் மந்திர மலையை பெயர்த்தும் பாரம் தாங்காமல் போட்டதில் பலர் மாண்டனர்.பகவான் தோன்றி தன் கையால் தூக்கி கருடன் மீது வைத்து பாற்கடலுக்கு சென்றார்.கருடன் தான் அங்கிருந்தால் வாசுகி வர வாய்ப்பில்லை என்ற காரணத்தால் விடை பெற்றது.

தேவர்களுன்.அசுரர்களும் வாசுகியை அழைத்து வந்து மந்திரமலையைகட்டி இரு பக்கமும் பிடித்தனர்.பகவானுக்கு,தலைப்பக்கம் பிடித்தால் வாசுகியின் சீற்றத்தின் வெப்பத்தை தாகமுடியாது என்று தெரியும். எனவே வேண்டுமென்றே தலையை பிடித்தார்.இது அசுரர்களுக்கு,தாங்கள் வாலைப்பிடிப்பது தன்மான,கௌரவ பிரச்னை யாக உருவெடுத்தது  தங்களுக்கு தலை பக்கம் வேண்டும் என்று சண்டையிட்டனர்.பகவான் புன்னகையுடன்  சம்மதித்தார்.

கடையத்தொடங்கியவுடன் மலை நீரில் மூழ்கியது பகவான் கூர்மாவதாரம் எடுத்து,                                                                                                                                                                                                                                                                                                                                                  ஆமை வடிவம் கொண்டு மலையை தாங்கினார்.மலை மத்தாக நிலைகொண்டது பல இன்னல்களுக்கு பின் வெளிவந்தது கொடிய ஆலகால விஷம் தான் ,அதை தாங்கமுடியாமல் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.கருணையுடன் அவரி விழுங்கி தொண்டைக்குள் நிறுத்திக்கொன்டார் விஷம் தன வீரியத்தைக்காட்டியும் பெருமான் அடக்கியதால் தொண்டையை மட்டும் நீல நிறமாக்கி அடங்கியது.பெருமான் நீலகண்டன் ஆனார்..மற்ற விபரங்களையும் பிரதோஷ  மகிமையையும்  தனியாக பார்ப்போம்.

கடை தல் தொடர்ந்தது.முதலில் காமதேனு வெளிப்பட்டது.அதை மகரிஷிகள் எடுத்துக்கொண்டனர்.
உச்சை சிரவஸ்  என்ற குதிரையை ...பலி சக்கரவர்த்தி,
ஐராவதம் என்ற வெள்ளை யானையை இந்திரன் 
பாரிஜாதம் என்ற விருட்சத்தையும்,தேவகன்னிகைகளை தேவர்கள்.
கௌஷ்துப  மாலையை பகவான் 
மகாலட்சுமி பகவானுக்கு மாலையிட்டாள்.அவர் தம் மார்பில் வசிக்கச்செய்ததால் ஸ்ரீநிவாசன் ஆனார்.
போதையை யை உண்டாக்க கூடிய வாருணி தேவதையை அசுரர்கள் உரிமையுடன் பெற்றனர்.

இறுதியி.ல் பகவானின் அவதாரமாகிய தன்வந்தரி அம்ருதம் நிரம்பிய கலசத்துடன் தோன்றினார்.அதை தேவர்களும் ,அசுரர்களும் மாறி மாறி பிடுங்கிக்கொண்டுஒடி சண்டையிட்டனர்.

பிரச்னையை மோகினி ரூபம் எடுத்து எப்படி பகவான் முடித்தார் என்பது பின்னர்.


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மீண்டும் மூண்ட சண்டையில் பலம் குறைந்த தேவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.பகவானிடம் சரணடைந்தனர்.அவர் "ஏதேனும் உபாயத்தின் மூலம் உங்களுக்கு அம்ருதம் கிடைக்க வழி செய்கிறேன் "என்று உறுதி அளித்தார்.அமுதத்தை பிடுங்கி சென்ற அசுரர்களால் உடல் புசிக்க முடியவில்லை.யார் முதலில் சாப்பிடுவது,அளவு குறித்து குழப்பமே நிலவியது.

இந்த நேரத்தில் பகவான் ,எவரும் அதுவரை கண்டிராத அதிரூப சுந்தரியாக, அவர்களுக்கு முன் தோன்றி ஒயிலுடன் அங்கும் இங்கும் நடை பயின்றாள் .அவ்வளவுதான்.அசுரர்கள் சண்டையை உடன் நிறுத்தி வாயைப்பிளந்தனர்.பெண்ணை நோக்கி 'நீ யார்?நாங்கள் எல்லோரும் உன்னிடம் மிகப்பிரியம் கொண்டுள்ளோம்.சண்டையையும் நிறுத்திவிட்டோம்.இந்த அம்ருதத்தை எங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க நீயே தகுதியானவள்,"என்று வேண்டினர்.

பெண் "நான் ஆண்கள் விஷயத்தில் ஸ் திர  புத்தி இல்லாதவள். என்னிடம் பிரியம் வைத்தது வேடிக்கையாக உள்ளது.எண் னைப்போன்றவர்களிடம்  அறிவாளிகள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள்."என்று பிடி கொடுக்காமல் நடித்தாள் .அசுரர்கள் மேலும் மயங்கி,அம்ருத கலசத்தை கொடுத்தனர்,

மோகினிப்பெண் " நான் தேவர் அசுரர் இருவருக்கும் சமமாக பங்கிடுவேன்.ஆனால் இடையில் யாரும் தலையிட்டு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது"என்று நிபந்தனை விதித்தாள்.எல்லோரும் கட்டுண்டனர்.

பின் மோகினியின் உத்தரவுப்படி  எல்லோரும் குளித்து புத்தாடை அணிந்து .தேவர்கள் ஒரு வரிசையாகவும்,அசுரர்கள் மற்றொரு வரிசையாகவும் கடற்கரையில் தர்ப்பையை பரப்பி அமர்ந்தனர்.மோகினி அம்ருத கலசத்தை ஏந்தியபடி வெகு சொகுசாகவும் ,ஒயிலாகவும்,மேலாடை நழுவியபடியும் மோகனப்புன்னகையை சிந்தியபடி நடந்து வந்தாள் .

முதலில் தேவர்களுக்கு பங்கிட ஆரம்பித்தாள் .ஆனால் வசீகர புன்னகையை மட்டும் அசுரர் பக்கம் வீசினாள் .அசுரர்கள் அவளுடைய அங்க அசைவினால் தங்கள் சிந்தையை பறிகொடுத்து அம்ருதத்தை மறந்தனர்.சிலர் சுய சிந்தனையில் இருந்தாலும்.நிபந்தனை கருதி மெளனமாக இருந்தனர்.தேவர்கள் சுகமாக புசித்தவண்ணம் இருந்தனர்..

அப்போது சுவர்பானு என்னும் அசுரன் தேவ வடிவம் கொண்டு தேவர்கள் மத்தியில் அமர்ந்து அம்ருதத்தை புசிக்கத் தொடங்கினான்.இதை சூரியனும்,சந்திரனும் பார்த்துவிட்டு மோகினி உருவில் இருந்த பகவானிடம் தெரிவித்தனர்.அம்ருதமும் தீர்ந்துபோய் கலசம் காலியாயிற்று.

இந்நிலையில் மோகினி மறைந்தாள் .சுய ரூபத்துடன் பகவான் வஞ்சகமாய் அம்ருதம் அருந்திய சுவர்பானுவின் தலையை வெட்டி வீழ்த்தினார். இருந்தாலும் அம்ருதம் உண்ட காரணத்தால் உயிர் போகவில்லை.பிரம்ம தேவர் ,அவன் தலையை சூரிய சந்திரர்களைப்போல ஒரு கிரகமாக்கினார்.அது தான் "ராகு "கிரகம்.தன்னைக்காட்டிக்கொடுத்த காரணத்தால் தான் சூரிய சந்திரர்களை கிரகண  காலத்தில் இன்றும் பிடிக்க முயற்சி செய்கிறான்.இதற்கிடையில் பகவான் கருடன் மீ தேறி தன லோகத்துக்கு பயணமானார்.

அசுரர்கள் மோசம் போனதை உணர்ந்தனர்.தேவர்களுடன் போராட்டம் தொடர்ந்தது.மோகினி மேல் சிவபெருமானே மோகித்து மயங்கியது வேறொரு கதை.

பிரதோஷ மகிமையை விரிவாக பார்ப்போம்.

மும்பை வெங்கட்டராமன்.


நேர்மறை உறுதி மொழிகள் -3



1974-ம்  ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களே  இருந்தன . நான் அப்போது மும்பை ,மாடர்ன் ஹிந்து ஹோட்டலில் தங்கியிருந்தேன். அந்தக் கட்டடத் தில் நான்கு மாடிகள். மூன்றாம், நான்காம் மாடிகளில் தங்கும் அறைகள். முதல் இரண்டு மாடிகளில் அலுவலகங்கள். மூன்றாம் மாடியில் எட்டு அறைகள். மொத்தம் 32 படுக்கைகள். இந்த தளத்தில் அறைகளில் தங்குபவர்கள் அடிக்கடி வந்து 2-3 நாட்கள் தங்கி  தங்கள் அலுவல் களை கவனித்து விட்டு செல்பவர்கள். நான்காம் மாடியில்  மொத்தம்  ஆறு அறைகள்.   20 படுக்கைகள். இங்கு தங்கி இருப்பவர்கள் எல்லாருமே பம்பாயிலேயே வேலை செய்பவர்கள். மாத வாடகையில்  வருடக் கணக்காக இங்கேயே தங்கும் பிரம்மச்சாரிகள்   இந்த 20 பேரில் நானும் ஒருவன்.எல்லாருமே நல்ல நண்பர்கள். நல்ல சம்பளம் வாங்குபவர்கள் (அந்த காலத்திலேயே Rs. 4000-5000 ரேஞ்சில்)   சினிமா போவது என்றால் 10-15 பேர் சேர்ந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளி  சமயத்தில் நீண்ட விடுப்பு எடுத்துக்  கொண்டு அனைவரும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்த வருடம் நான் வேலை செய்யும் கம்பெனியின் Agents Conference தீபாவளியன்று  பம்பாயிலேயே நடக்க இருந்தது. என்னுடைய விடுமுறை மற்றும் ரயில்வே டிக்கெட் கான்செல் ஆகியது. தீபாவளிக்கு மூன்று .நாட்கள் முன்னரே எல்லா நண்பர்களும் ஊருக்கு சென்றனர்.எல்லா அறைகளும் காலி. நான்காம் மாடியில் யாருமே இல்லை.. இரவில் 12 மணி  வரை ரூமில் அரட்டை  அடிப்போம்.அன்று இரவு அறையில் தனிமை. பேச்சுத் துணைக்கு சுவர்களும் கட்டில்களும்  தான்.  டேப் ரிகார்டரில் ஆந்தி, மௌசம் பாட்டுக்கள் போட்டேன். முழுவதும் கேட்க முடிய வில்லை. தனிமை என்னை ஜெயிக்க ஆரம்பித்தது. மறு நாள் காலை எழுந்தேன். பேப்பர் படிக்கும் மூட் இல்லை. பேசுவதற்கு  யாருமே இல்லை.சாப்பிடும்போது 4-5 பேர். சினிமா போனால் குறைந்தது பத்து பேர். ஒரு ஜட்டி வாங்கினால் கூட   ஏழெட்டு பேர் சேர்ந்தே கடைக்குப் போவோம்.இப்படியே பழக்கப் பட்ட என்னால் தனிமையை ரசிக்க முடிய வில்லை.

 ஹோட்டல் அறைதான் எனக்கு அலுவலமாக இருந்தது. எந்த வேலையும் ஓட வில்லை. என் ஸ்டெனோவும் விடுப்பில் லால்குடி  போய் விட்டார்.இன்னொரு உதவியாளர் மராத்திக் காரர். அவரும் புனாவுக்கு அருகே இருந்த அவர.து கிராமத்துக்கு சென்று விட்டார். " மோஹன், அந்துலே நல்லா மாட்டிக் கிட்டார்."  " ஈரோசில் நல்ல படம், டவரிங் இன்பெர்னோ. நைட் ஷோ போலாமா?" நான்தான் சொன்னேனே Bobby 25 வாரம் போகும்னு" என்றெல்லாம் பகிர்ந்து கொள்ள யாருமே இல்லை. படுக்கையில் அமர்ந்து பேப்பரை கையில் வைத்த வண்ணம் பால்கனி பக்கம் பார்த்தேன். வாலஸ் ரோட் அமைதி காத்தது. சற்றே கண்களில் நீர் பனிக்கத் தொடங்கியது. சுற்றி யாருமே இல்லையா? தனிமை--தனிமை--தனிமை. இன்னும் சில நாட்கள் நான் என்ன செய்யப் போகிறேன்? இந்த வெறுமையில் , இந்த தனிமையில். உடம்புக்கு ஏதாவது ஆகி விடுமோ? மெண்டல் ஆகி விடுவேனோ? இந்த வேலையை விட்டு ஓடிவிடலாமா? 

" மூர்த்தி அண்ணா, நீங்க மட்டும்தான் இருக்கீங்க போல. காபி சாப்பிடுங்க. கிட்சென் க்லோஸ்டு, breakfast க்கு என்ன வாங்கி வரட்டும்? " கணேஷ் கதவைத் திறந்து உள்ளே வந்தான். கணேஷ் சமையல் கட்டில் வேலை செய்பவன்.சேலத்துக் காரன்.

"கணேஷ், நீ தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?" என்ன பதில் வருமோ என்று அவனை உற்றுப் பார்த்தேன்.
" அண்ணா, பத்து மணி சர்மா ட்ராவெல்ஸ்லே பெங்களூர் போய் சேலம் போரேன் Happy deepavali " என்ற படி 
மறைந்தான். சேச்சே , இவனாவது இங்கே இருக்கக்கூடாதா என்று நினைத்தேனே, என்ன சுயநலம்.

ரூமிலேயே அடை பட்டுக் கிடந்தேன். முதல் நாள் எதுவுமே சாப்பிடவில்லை.மறு நாள் காலை எழுந்ததுமே பசித்தது. குளித்து விட்டு வெளியே கிளம்பினேன். மாதுங்கா சென்றேன். உடுப்பியில் full meals. அரோராவில் படம் பார்த்தேன். 8 Ltd பஸ்ஸில் Flora Fountain வந்து, EROS சினேமாவில் ஆங்கிலப் படம் பார்த்தேன். New Marine Lines -ல் ஒரு ரோட் கடையில்  பாவு பாஜி சாப்பிட்டு ஹோட்டல் திரும்பினேன்.

இந்த இரண்டு நாட்கள்  மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.

இப்போதல்லாம் தனிமை இனிக்கிறது. தனிமையை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். தனிமையின் விலை மதிப்பில்லா நிமிஷங்களின் தாக்கத்தை இப்போது உணர்கிறேன்.

காரணம் -நேர்மறை உறுதி மொழிகளின் புரிதல்தான்.
இப்போது உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறேன்.


1. நான் தனிமையான நிலைகளை எனக்காக ஒதுக்கிக்கொண்டு அதை கொண்டாடுகிறேன்.
2. என் வாழ்வில் என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே என்னோடுதான் இருக்கி றார்கள்.
3. என்னுடைய நம்பிக்கை,உண்மைகள், கனவுகள்,பக்தி மார்க்கம் இவைகளைப் பற்றி சுய ஆராய்வு செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கிறது.
4. தனிமையான சமயங்களில் என்னால் அமைதியான சுகத்தை அனுபவிக்க முடிகிறது.
5. நான் என்னை நேசிக்கிறேன்; என்னை நானாக ஒத்துக் கொள்கிறேன். என்னால் தனிமையில் இனிமை காண முடியும்.
6. என்னால் தனிமை, வெறுமை போன்ற மாயைகளை உடைத்து வெளியே வர முடியும்.
7. என் பணிகளை நானே செய்யும்போது தன்னம்பிக்கையுடனும், சுகமாகவும் இருக்கிறேன். இதனால் நான் எதையோ சாதித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இனி தனிமையைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும் ?

மூர்த்தி