Saturday, January 4, 2014

நேர்மறை உறுதி மொழிகள் -3



1974-ம்  ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களே  இருந்தன . நான் அப்போது மும்பை ,மாடர்ன் ஹிந்து ஹோட்டலில் தங்கியிருந்தேன். அந்தக் கட்டடத் தில் நான்கு மாடிகள். மூன்றாம், நான்காம் மாடிகளில் தங்கும் அறைகள். முதல் இரண்டு மாடிகளில் அலுவலகங்கள். மூன்றாம் மாடியில் எட்டு அறைகள். மொத்தம் 32 படுக்கைகள். இந்த தளத்தில் அறைகளில் தங்குபவர்கள் அடிக்கடி வந்து 2-3 நாட்கள் தங்கி  தங்கள் அலுவல் களை கவனித்து விட்டு செல்பவர்கள். நான்காம் மாடியில்  மொத்தம்  ஆறு அறைகள்.   20 படுக்கைகள். இங்கு தங்கி இருப்பவர்கள் எல்லாருமே பம்பாயிலேயே வேலை செய்பவர்கள். மாத வாடகையில்  வருடக் கணக்காக இங்கேயே தங்கும் பிரம்மச்சாரிகள்   இந்த 20 பேரில் நானும் ஒருவன்.எல்லாருமே நல்ல நண்பர்கள். நல்ல சம்பளம் வாங்குபவர்கள் (அந்த காலத்திலேயே Rs. 4000-5000 ரேஞ்சில்)   சினிமா போவது என்றால் 10-15 பேர் சேர்ந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளி  சமயத்தில் நீண்ட விடுப்பு எடுத்துக்  கொண்டு அனைவரும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்த வருடம் நான் வேலை செய்யும் கம்பெனியின் Agents Conference தீபாவளியன்று  பம்பாயிலேயே நடக்க இருந்தது. என்னுடைய விடுமுறை மற்றும் ரயில்வே டிக்கெட் கான்செல் ஆகியது. தீபாவளிக்கு மூன்று .நாட்கள் முன்னரே எல்லா நண்பர்களும் ஊருக்கு சென்றனர்.எல்லா அறைகளும் காலி. நான்காம் மாடியில் யாருமே இல்லை.. இரவில் 12 மணி  வரை ரூமில் அரட்டை  அடிப்போம்.அன்று இரவு அறையில் தனிமை. பேச்சுத் துணைக்கு சுவர்களும் கட்டில்களும்  தான்.  டேப் ரிகார்டரில் ஆந்தி, மௌசம் பாட்டுக்கள் போட்டேன். முழுவதும் கேட்க முடிய வில்லை. தனிமை என்னை ஜெயிக்க ஆரம்பித்தது. மறு நாள் காலை எழுந்தேன். பேப்பர் படிக்கும் மூட் இல்லை. பேசுவதற்கு  யாருமே இல்லை.சாப்பிடும்போது 4-5 பேர். சினிமா போனால் குறைந்தது பத்து பேர். ஒரு ஜட்டி வாங்கினால் கூட   ஏழெட்டு பேர் சேர்ந்தே கடைக்குப் போவோம்.இப்படியே பழக்கப் பட்ட என்னால் தனிமையை ரசிக்க முடிய வில்லை.

 ஹோட்டல் அறைதான் எனக்கு அலுவலமாக இருந்தது. எந்த வேலையும் ஓட வில்லை. என் ஸ்டெனோவும் விடுப்பில் லால்குடி  போய் விட்டார்.இன்னொரு உதவியாளர் மராத்திக் காரர். அவரும் புனாவுக்கு அருகே இருந்த அவர.து கிராமத்துக்கு சென்று விட்டார். " மோஹன், அந்துலே நல்லா மாட்டிக் கிட்டார்."  " ஈரோசில் நல்ல படம், டவரிங் இன்பெர்னோ. நைட் ஷோ போலாமா?" நான்தான் சொன்னேனே Bobby 25 வாரம் போகும்னு" என்றெல்லாம் பகிர்ந்து கொள்ள யாருமே இல்லை. படுக்கையில் அமர்ந்து பேப்பரை கையில் வைத்த வண்ணம் பால்கனி பக்கம் பார்த்தேன். வாலஸ் ரோட் அமைதி காத்தது. சற்றே கண்களில் நீர் பனிக்கத் தொடங்கியது. சுற்றி யாருமே இல்லையா? தனிமை--தனிமை--தனிமை. இன்னும் சில நாட்கள் நான் என்ன செய்யப் போகிறேன்? இந்த வெறுமையில் , இந்த தனிமையில். உடம்புக்கு ஏதாவது ஆகி விடுமோ? மெண்டல் ஆகி விடுவேனோ? இந்த வேலையை விட்டு ஓடிவிடலாமா? 

" மூர்த்தி அண்ணா, நீங்க மட்டும்தான் இருக்கீங்க போல. காபி சாப்பிடுங்க. கிட்சென் க்லோஸ்டு, breakfast க்கு என்ன வாங்கி வரட்டும்? " கணேஷ் கதவைத் திறந்து உள்ளே வந்தான். கணேஷ் சமையல் கட்டில் வேலை செய்பவன்.சேலத்துக் காரன்.

"கணேஷ், நீ தீபாவளிக்கு ஊருக்கு போகலையா?" என்ன பதில் வருமோ என்று அவனை உற்றுப் பார்த்தேன்.
" அண்ணா, பத்து மணி சர்மா ட்ராவெல்ஸ்லே பெங்களூர் போய் சேலம் போரேன் Happy deepavali " என்ற படி 
மறைந்தான். சேச்சே , இவனாவது இங்கே இருக்கக்கூடாதா என்று நினைத்தேனே, என்ன சுயநலம்.

ரூமிலேயே அடை பட்டுக் கிடந்தேன். முதல் நாள் எதுவுமே சாப்பிடவில்லை.மறு நாள் காலை எழுந்ததுமே பசித்தது. குளித்து விட்டு வெளியே கிளம்பினேன். மாதுங்கா சென்றேன். உடுப்பியில் full meals. அரோராவில் படம் பார்த்தேன். 8 Ltd பஸ்ஸில் Flora Fountain வந்து, EROS சினேமாவில் ஆங்கிலப் படம் பார்த்தேன். New Marine Lines -ல் ஒரு ரோட் கடையில்  பாவு பாஜி சாப்பிட்டு ஹோட்டல் திரும்பினேன்.

இந்த இரண்டு நாட்கள்  மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.

இப்போதல்லாம் தனிமை இனிக்கிறது. தனிமையை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். தனிமையின் விலை மதிப்பில்லா நிமிஷங்களின் தாக்கத்தை இப்போது உணர்கிறேன்.

காரணம் -நேர்மறை உறுதி மொழிகளின் புரிதல்தான்.
இப்போது உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறேன்.


1. நான் தனிமையான நிலைகளை எனக்காக ஒதுக்கிக்கொண்டு அதை கொண்டாடுகிறேன்.
2. என் வாழ்வில் என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே என்னோடுதான் இருக்கி றார்கள்.
3. என்னுடைய நம்பிக்கை,உண்மைகள், கனவுகள்,பக்தி மார்க்கம் இவைகளைப் பற்றி சுய ஆராய்வு செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கிறது.
4. தனிமையான சமயங்களில் என்னால் அமைதியான சுகத்தை அனுபவிக்க முடிகிறது.
5. நான் என்னை நேசிக்கிறேன்; என்னை நானாக ஒத்துக் கொள்கிறேன். என்னால் தனிமையில் இனிமை காண முடியும்.
6. என்னால் தனிமை, வெறுமை போன்ற மாயைகளை உடைத்து வெளியே வர முடியும்.
7. என் பணிகளை நானே செய்யும்போது தன்னம்பிக்கையுடனும், சுகமாகவும் இருக்கிறேன். இதனால் நான் எதையோ சாதித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இனி தனிமையைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும் ?

மூர்த்தி 


No comments:

Post a Comment