“சிந்தைக்கு ஒரு சவால் பகுதி 3”
ஹரி ஓம் !
நமஸ்காரங்கள் !
சிந்தைக்கு ஒரு சவால் – பகுதி 2சவால்ஞாபகமிருக்கிறதா?
பாடலைத்திருப்பிப்போட்டு இன்னுமொரு பாடலா?
“நிஸிதாஸிரதோபீகோ ந்யேஜதே(அ)மரணா ருசா |
ஸாரதோ ந விரோதீ ந(ஹ) ஸ்வாபாஸோ பரவானுத ||
தனுவாரபஸோ பாஸ்வானதீரோ(அ)வினதோரஸா |
சாருணா ரமதே ஜந்யே கோ(அ)பீதோ ரஸிதாஸினி ||”
சம்ஸ்க்கிருதத்தில் அரைமாத்திரை அளவேயுள்ள எழுத்துக்கள்(மெய்யெழுத்துக்கள்) பின்வரும் உயிர்மெய்யெழுத்தோடு சேர்ந்தேவரும். உதாரணமாக,
’ந்யேஜ’ என்ற எழுத்துக்கள் திருப்பிப்போடும்போது ’ஜந்யே’ என்றுதான் வரும்.
மேலும் (அ) என்பவை மறைந்திருக்கும் அகாரமாகும். பதச்சேற்கையில்(ஸந்தி) இவ்வாறு வரும், பதம் பிரிக்கும்போது அகாரமாகவே வரும்.
முதல் இரண்டு வரிகளின் கடைசி எழுத்திலிருந்து ஆரம்பித்து தலைகீழாக செல்வதே மூன்றாவது நான்காவது வரிகள். முதல் இரண்டு வரிகளின் அர்த்தமும் கடைசி இரண்டு வரிகளின் அர்த்தமும் எதிரெதிரானவை.
முதல் இரண்டு வரிகளுடையஅர்த்தம்:
“கூர்மையான கத்திவைத்திருப்பவன் , பயமேயில்லாதவன்,ஒளிமயமானவன், அழகானவன், யுத்தபூமியின் கோரத்தை தாங்குபவன் இப்படிப்பட்ட நம் எதிரி நம் பலத்தை கண்டு பயந்து நடுங்குபவன் இல்லை”.
கடைசி இரண்டு வரிகளுடைய அர்த்தம்:
“அழகான பளபளக்கின்ற உயர்ந்த கவசங்களை மார்புவரை அணிந்தவன் ஆயினும் கோழையானவன்யுத்தத்தின் சப்தத்தைக்கேட்டே உயிரை விட்டுவிடுபவன் இவன் யுத்தகளத்தில் பயமில்லாமல் என்ன செய்துவிடப்போகிறான்?”
சம்ஸ்க்ருதத்தில் இதை ’முரஜ பந்த’ என்று சொல்வார்கள். ’பத்ம பந்த’, ’கட்க பந்த’, ’ஸர்வதோ பத்ர’ என்று பலவிதமான வார்த்தைஜாலங்கள் நிரம்பிய கவிதைகளும் காவியங்களும் அவர்களுடைய கற்பனாசக்தியையும் இலக்கண ஆற்றலையும் பறைசாற்றுகின்றன.
தமிழ் மொழியிலும் சம்ஸ்க்ருதத்திலும் இவ்விதமான பாடல்கள் கதைகள் சரித்திரங்கள் என்று பல உதாரணங்கள் பார்க்கலாம்.
தமிழில் இதை ’மாலைமாற்றுதல்’ என்றும்ஆங்கிலத்தில்’பாலின்ட்ரோம்’ என்றும் சொல்வார்கள்.ஆங்கிலத்தில் வெறும் வார்த்தைஜாலம் மட்டுமே, பெரிய காவியங்களென்றோ கவிதைகளென்றோ காண்பது மிகவும் அரிது.
உதாரணமாக தமிழில் சில வார்த்தைகள் பார்க்கலாம் :
மோருதருமோ, காக்கா, விகடகவி, தாத்தா, பாபா, மாடுஓடுமா,,மோருபோருமோ
திருஞானசம்பந்தசுவாமிகள்அருளிச்செய்தசீர்காழிதேவாரத்திருப்பதிகம்(மூன்றாம்திருமுறை 117வதுதிருப்பதிகம்)3.117 சீர்காழி -திருமாலைமாற்று விருத்தத்தில் பதினோரு பாடல்கள் உள்ளன. அவற்றில் முதலாவது பாடல்
“யாமாமாநீயாமாமாயாழீகாமாகாணாகா
காணாகாமாகாழீயாமாமாயாநீமாமாயா”
இந்தப்பாடலை சரியாகப் பதம் பிரித்து படித்தால் அர்த்தம் புரியும் :
யாம் ஆம் மா நீயாம் ஆ மா யாழி காமா காண் னாகா
காண காமா காழீயா மாமாயா நீ மாமாயா
இந்தப் பாடலின் அர்த்தம் :
“நாம் பசுக்கள், நீ பசுபதி, அழகானவன், எல்லோருக்கும் விருப்பமானவன், யாழி வாசிப்பவன்,பாம்புகளை தரித்தவன், காமனை(மன்மதனை) காணாமல் செய்தவன், சீர்காழியில் உறைபவன், மறையில் மறைவோனே, எம்மைச்சுற்றியுள்ள மாயயை விலக்கு”.
இந்தப்பதிகத்தில் உள்ள எல்லாப்பாடல்களுமே, பதினோரு பாடல்கள், திருமாலைமாற்று விருத்தத்தில் உள்ளன. அதனால், இப்பதிகத்திற்கு திருமாலைமாற்று பதிகம் என்று பெயர். இப்பதிகத்தில் எட்டாவது, பதினொன்றாவது பாடல்களைத்தவிர மற்ற அனைத்துப் பாடல்களுமே நெடில் எழுத்துக்களாக உள்ளன என்பது இன்னுமொரு சிறப்பம்சம். உங்கள் நேரத்தில் கொஞ்சம் இந்தப்பதிகத்தில் செலவழியுங்கள்.
மாக என்ற கவிஞர் சிசுபாலவதம் என்ற காவியத்தில் பத்தொன்பதாவது அத்தியாயத்தில் பல ஆச்சர்யகரமான பாடல்களை புனைந்துள்ளார் அதில் ஒன்று :
सकारनानारकासकायसाददसायका ।
रसाहवावाहसारनादवाददवादना ॥
இந்தப்பாடலின் சிறப்பம்சம் :
மொத்தம் பதினாறு எழுத்துக்கள் உள்ள பாடலின் இரண்டு வரிகளையும் எட்டு ஏட்டு எழுத்துக்களாக நான்கு வரிகளில் தனித்தனியாக பிரித்து எழுதுங்கள்.
स का र ना ना र का स
का य सा द द सा य का
र सा ह वा वा ह सा र
ना द वा द द वा द ना
இப்போது பாருங்கள் பாடலின் பெருமையை :
- நான்கு வரிகளுமே மாலைமாற்று விருத்தத்தில்(பாலின்ட்ரோம்)
- மேலிருந்து கீழாக முதல்வரிசையும் கடைசிவரிசையும் ஒன்றே
- அவ்வாறே இரண்டாவது-ஏழாவது, மூன்றாவது-ஆறாவது, நான்காவது-ஐந்தாவது
- கீழிருந்து மேலும் அவ்விதமே.
இவ்விதம் பல ஜாலவித்தைகள் இவ்வத்தியாயத்தில் உள்ளன.
வேதாந்ததேசிகர் படைத்த ’பாதுகாஸஹஸ்ரம்’ என்ற காவியத்திலும் இவ்வாறு அனேக அம்சங்கள் நிரைந்துள்ளன.
ஸ்ரீ வேங்கடாத்வரீ என்ற வேதாந்ததேசிகரின் சிஷ்யர், இவர் காஞ்சீபுரத்திற்கு அருகாமையில் அரசானிபாலை என்ற ஊரைச்சேர்ந்தவர், சம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றவர், பதினான்கு நூல்களுக்குமேல் படைத்தவர், ’லக்ஷ்மீசஹஸ்ரம்’ என்ற நூலை எழுதியபின் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றவர், ’ராகவயாதவீயம்’ என்கிற அருமையான காவியத்தைப்படைத்துள்ளார். இதன் அருமை என்ன தெரியுமா?
முப்பது பாடல்களே உள்ள இந்தகாவியத்தின் ஒவ்வொரு பாடலும் முதல் எழுத்திலிருந்து கடைசிஎழுத்துவரை சாதாரண நடையில் படித்தால் (அனுலோமமாக) ’ராமாயணம்’.
அதேபாடலை கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்துவரை(பிரதிலோமமாக) பின்னோக்கிப் படித்தால் ’மகாபாரதம்’
என்ன ஆச்சரியமாக உள்ளதா ? பாடலைப் படிக்கவேண்டுமென்று ஆவலாக உள்ளதா?
அடுத்தவாரம் பார்ப்போம்!
இன்னும் வரும்,
கலிவரதன்
09382817652
--
No comments:
Post a Comment