Sunday, March 25, 2012

சிந்தைக்கு ஒரு சவால் - பகுதி 2


ஹரி ஓம் !
நமஸ்காரங்கள் !
“சிந்தனைக்கு ஒரு சவால் – பகுதி 2

சிந்தனைக்கு ஒரு சவால் – பகுதி 1சவால்ஞாபகமிருக்கிறதா?

“வாயை மூடிக்கொண்டு பேச பாட முடியுமா?”
முடியும் என்கிறார் ஒரு சம்ஸ்கிருத கவிஞர்.  இவர் சம்ஸ்கிருதத்தில் பஞ்சமஹாகாவியங்கள் என்று பிரஸித்திபெற்ற ஒரு காவியத்தின் கர்த்தா.  இவறுடைய காவியத்தில் ஒரு பாடல் வரிகள் -

“ந நோநநுந்நோ நுந்நோநோ நாநா நாநாநநா நநு |
நுந்நோநுந்நோ நநுந்நேநோ நாநேநா நுந்நநுந்நநு(த்) |”

வாயைத்திறக்காமல் மேல்பற்வரிசையும் கீழ்பற்வரிசையும் சேர்த்துவைத்துக்கொண்டு சொல்லக்கூடிய பாடல் இது.
இன்னுமொரு சிறப்பு அம்சம் : ஒரே ஒரு உயிர்மெய் எழுத்தால் (’நகாரமாத்திரம்’) பாடப்பெற்ற வரிகள்.
இந்தப்பாடலின் அர்த்தம் தெரியுமா?
நம் தமிழகத்தைச்சேர்ந்த சம்ஸ்கிருத கவிஞர் பாரவியின் பஞ்சமஹாகாவ்யங்களில் ஒன்றான ’கிராதார்ஜுனீயம்’ என்கிற காவ்யத்தில்தான் இந்த பாடல்வரிகள் வருகின்றன. இவ்வரிகளின் சாராம்ஸம் :
’எல்லாவித மனிதர்களுக்கும் அனேக முகங்கள்(குணங்கள்) உள்ளன. பலமிருந்தும் அடிபட்ட நிலையில் நிராதரவாக  இருப்பவனை பலவானாகவுள்ளவன் மேலும் அடிப்பதோ துன்புறுத்துவதோ புருஷார்த்தம்(வீரனுக்கு அழகு) அல்ல!’

இதைத்தான் ’செத்தபாம்பை அடிப்பதுபோல’ என்று சொன்னார்களோ?

சரியான விதத்தில் பதம் பிரித்து அன்வயப்படுத்தி (வார்த்தைகளை அர்த்தம் வருமாறு கோர்வைப்படுத்தி) சம்ஸ்கிருத இலக்கணரீதியாக விளக்கவைத்தால் மேற்கண்ட அர்த்தம் தொனிக்கும்.  கவியுடைய கவித்துவ சமத்காரம் பூராணமாக இந்த மஹாகாவ்யத்தில் அநேகவிடங்களில் பார்க்கலாம்.
யார் இந்த மஹாகவிஞர்?

மஹாராஷ்ட்ர தேசத்தில் ஆனந்தபூர் சமஸ்தானத்தில் குடியேறிய கௌசிகபிராம்மண கோத்ரத்தில் உதித்த நாராயணஸ்வாமீ என்கிற தமிழ் பண்டிதரின் புதல்வர்தான் இவர்.  தமோதர என்கிற பெயர் பின்னாட்களில் பாரவீ என்று பிரசித்தமாயிற்று. சாளுக்கிய வம்ச ராஜா விஷ்னுவர்தனன், கங்கவம்ச ராஜா துர்வினீதன் ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் பெற்ற இவர் பல்லவசாம்ராஜ்யாதிபதி ஸிம்ஹவிஷ்னுவின் அவையில் காஞ்சீபுரத்தில் இயற்றிய மஹாகாவ்யமே ’கிராதார்ஜுனீயம்’.  மஹாபாரதத்தில் வனபர்வாவிலிருந்து எடுக்கப்பெற்ற சிறுகதைத்துளியிலிருந்து பெரும்காவ்யமாக பரிணமித்த பாடல்களே ’கிராதார்ஜுனீயம்’.  இந்த மஹாகாவ்யத்தில் சொல்லப்படாத அரச நீதிகளும், அரசாட்சி மாண்புகளும் இல்லவேயில்லை என்று கூறலாம்.

சம்ஸ்கிருத இலக்கணரீதியாகப்பார்த்தால் காவ்யத்தில் ஒரு சதுரங்கமே இவருடைய சமத்காரத்தில் பிரமிப்பூட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓரெழுத்து கவிதைகள், ஒரு பாடலை முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்துவரை திருப்பிப்போட்டு இன்னுமொரு பாடல், முதல் பாடலுக்கும் இரண்டாவதுக்கும் உள்ள அர்த்தவேற்றுமைகள், பாடலின் முதல், மூன்றாவது, ஐந்தாவது என்ற வரிசையில் எழுத்துக்களின் இடமாற்றத்தால் தோன்றும் அர்த்தபேதங்கள், சித்திர காவ்ய நடையில் பாடல்கள் இப்படி பலவிதமாக ஒரு  சாகச(’சர்க்கஸ்’) புலமையை பலவிடங்களில் பார்க்கலாம்.

காளிதாசனைப்போல் பாரவியுடைய வாழ்க்கையும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைக்கொண்டது. பின்னாளில் கொஞ்சம் பார்க்கலாம்.

பாடலைத்திருப்பிப்போட்டு இன்னுமொரு பாடலா? 

“நிஸிதாஸிரதோபீகோ ந்யேஜதே(அ)மரணா ருசா |
ஸாரதோ ந விரோதீ ந(ஹ) ஸ்வாபாஸோ பரவானுத ||
தனுவாரபஸோ பாஸ்வானதீரோ(அ)வினதோரஸா |
சாருணா ரமதே ஜந்யே கோ(அ)பீதோ ரஸிதாஸினி ||”
சம்ஸ்க்கிருதத்தில் அரைமாத்திரை அளவேயுள்ள எழுத்துக்கள்(மெய்யெழுத்துக்கள்) பின்வரும் உயிர்மெய்யெழுத்தோடு சேர்ந்தேவரும்.  உதாரணமாக,

ந்யேஜ’ என்ற எழுத்துக்கள் திருப்பிப்போடும்போது ’ஜந்யே’ என்றுதான் வரும்.
மேலும் (அ) என்பவை மறைந்திருக்கும் அகாரமாகும்.  பதச்சேற்கையில்(ஸந்தி) இவ்வாறு வரும், பதம் பிரிக்கும்போது அகாரமாகவே வரும்.

முதல் இரண்டு வரிகளின் கடைசி எழுத்திலிருந்து ஆரம்பித்து தலைகீழாக செல்வதே மூன்றாவது நான்காவது வரிகள்.   முதல் இரண்டு வரிகளின் அர்த்தமும் கடைசி  இரண்டு வரிகளின் அர்த்தமும் எதிரெதிரானவை.

அர்த்தம் அடுத்தவார சவாலில்!

இதைப்போன்ற பாடல்கள் தெரிந்தால் தயவு செய்து நமது வலைத்தலத்துக்கு அனுப்புங்கள் என்று வேண்டுகிறேன்.

இன்னும் வரும்,
கலிவரதன்

No comments:

Post a Comment