Sunday, March 25, 2012

குரு கல்யாண சுந்தரம் அவர்கள் -By Murthy

குரு கல்யாண சுந்தரம் அவர்கள் 


                                                                                                                               
மார்ச் திங்கள் 5 ம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். மும்பை நகரின் ஒரு முக்கிய பிரமுகரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த தினம் அது. இந்தியாவிலேயே மிகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரம் என்ற பெருமை பெற்ற நாட்டியப்பள்ளியின் இயக்குனராக இருப்பவர். எண்பது வயதைத்தாண்டிய இளைஞர் அவர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பரதம் பயில்விக்கும் ஆசிரியராக இன்னமும் பணி புரிந்து கொண்டிருக்கிறார். இவர்தான் குரு கல்யாணசுந்தரம் அவர்கள்.

தஞ்சை மண்ணைச் சேர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற நட்டுவனார் குடும்பத்தை சேர்ந்தவர்தான்  குரு  கல்யாணசுந்தரம் அவர்கள். இவர் மூதாதையர்கள்  மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜியின்  நல்லாதரவுடன் தென்னிந்தியாவின் சிறப்பு பெற்ற ஆலயங்களில் கலைப்பணிக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். நாட்டியககலைக்கான தொன்மை வாய்ந்த விதிமுறை நூலான அபிநய நவநீதம் என்ற நூல் 1886 ம் ஆண்டு இயற்றப்பட்டது. விலை மதிக்க முடியாத இந்த நூலின்ஆசிரியராகக் கருதப்படுபவர் பரத வித்வான் பஞ்சாபகேச பிள்ளை அவர்கள். இவரது ஒரே மைந்தர் பரத வித்வான் குப்பையா பிள்ளை அவர்கள். 1887 ம வருடம் பிறந்த இவர், தனது தந்தையாலும்,பின்னர் தஞ்சை கண்ணையா  நட்டுவனார்  அவர்களாலும் நாட்டியக்கலையில் ஈடுபடுத்தப்பட்டார். தனது 15 வது வயதிலேயே நட்டுவனாராகப் பணியாற்றத் தொடங்கினார். பின் ஆலயத்தில் நாட்டியப்பணி ஆற்ற திருவிடைமருதூருக்கு  வந்தார்.  இங்கு பலருக்கு   பரதக்கலை பயில்வித்தார். இவரிடம்தான் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று புகழ் பெற்ற லலிதா, பத்மினி  மற்றும் ராகினி ஆகியோர் பரத நாட்டியம் பயின்றார்கள்.
நவசந்தி கவுத்துவம், தானா வர்ணம் போன்ற தொன்மை வாய்ந்த நாட்டியங்களை புதுப்பித்து, அவைகளை பிரசித்தி பெற வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. சரபேந்திர பூபாள குறவஞ்சி மற்றும் குற்றால குறவஞ்சி போன்ற நாட்டிய நாடகங்களையும் இவர் மிளிர வைத்தார். 
1945 ம் ஆண்டு மும்பையில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ  ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரம் அமைப்புக்கு முதல்வராக பணியாற்றினார்.1979-ம ஆண்டு சங்கீத  நாடக அகடமியின் கவுரவ உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார்.  தமிழக அரசால் 1963ல் கலைமாமணி விருது அளித்து கவுரவிக்கப்பட்டார்.
 80 ஆண்டுகளுக்கு மேல் பரதக்கலைக்கு தன்னை அர்ப்பணித்த குரு மூக்கையா பிள்ளையின் மகன் திரு குரு கல்யாணசுந்தரம் அவர்கள் மும்பையில் தனது கலைப்பணியை அறுபது ஆண்டுகளாக சிறப்புடன் ஆற்றி வருகிறார்.மும்பையின்  புகழ்  பெற்ற நட்சத்திரங்களான கோபி கிருஷ்ணா, வாணி கணபதி, வஹிதா ரெஹ்மான் போன்றவர்கள் இவரது மாணவிகள்.செல்வி பதமா சுப்ரமணியம் அவர்கள் சில காலம் இவரிடம் பரதம் பயின்றார்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நமது ஆலயத்தின் கும்பாபிஷேகத்தின் பொது செல்வி பதமா சுப்ரமணியம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி  நமது ஆலயத்தில் நடைபெறச் செய்தவர் குரு கல்யாணசுந்தரம் அவர்கள்தான். ஆண்டுதோறும் வசந்த உத்சவத்தின் போது, இவரது மாணவிகள் மகாலிங்க சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி செய்வது வழக்கம். 
குரு கல்யாணசுந்தரம் அவர்கள் 1999-2000 ஆண்டுக்கான சங்கீத நாடக அகடமியின் விருதைப் பெற்றவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாக 2003-ம ஆண்டில் கௌரவிக்கப்பட்டார். பரதநாட்டிய குருவாக இவரது வாழ்நாள்  சாதனைக்காக மும்பை ஷண்முகானந்தா சபா 2004- ம் ஆண்டு இவருக்கு 'டாக்டர் M.S. சுப்பலக்ஷ்மி சிறந்த குருவுக்கான விருதை' அளித்தது.. 2010 ம ஆண்டு அமெரிக்காவில் கிளீவ்லாந்து "நாட்ய ரத்னாகர்" விருதை இவர் பெற்றார். 





உலக அளவில், பிலடல்பியா நகர் "உலக சிவா விழா" ,சிட்னி கலை விழா, நேபால கலை விழா, சிங்கப்பூர் தேசிய விழா, சீன அகில உலக கலை விழா, கொலம்பியாவின் அகில உலக நாட்டிய விழா போன்ற ஏராளமான விழாக்களில் இவரது தலைமயில் நாட்டியக்குழுக்கள் பங்கு பெற்று உலக அளவில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளனர். 

புரந்தரதாசர், ஆதி சங்கரர், துளசிதாசர், தியாகப்பிரும்மர், பாரதியார், சுவாதி திருநாள் போன்றவர்களின் படைப்புகளை நாட்டிய வடிவில் தந்த பெருமை இவரது நாட்டியப் பள்ளிக்கு உண்டு . இவர்களது நாட்டிய நாடகங்களான சரபேந்திர பூபால  குறவஞ்சி, வசந்தவல்லி,  திருக் குற்றாலக்குறவஞ்சி, ஸ்ரீ ஆண்டாள், கிருஷ்ண லீலா, ஸ்கந்த லீலா, தியாகப்ப்ரம்ம அஞ்சலி, பஞ்ச கன்யா, ஜெய  ஜெய கிருஷ்ணா, புரந்தரோபநிஷத், காந்தி அஞ்சலி போன்றவை அறிஞர்களாலும், விமர்சர்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றவையாகும்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரம் உலக அளவில், பழம் பெருமை வாய்ந்த தஞ்சாவூர் பாணி பரத நாட்டிய த்தை,   தனித்தன்மையுடனும், புனிதத்துவத்துடன் பயில்விக்கும் ஒரு மாபெரும் ஸ்தாபனமாக விளங்குகிறது.
மதிப்புக்குரிய குரு கல்யாணசுந்தரம் பற்றிய இன்னுமொரு செய்தி. நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் இவர் நமது பள்ளியில் பயின்றவர். இவரதுஎளிமையும் தன்னடக்கமும் வியக்கத்தக்கது. இன்றைய இளைய தலைமுறைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகவும், ஒரு Role Model  ஆகவும் குரு கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்ந்து வருவதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 

நமது பள்ளியின் பழைய மாணவர் ஒருவரும், உலக அளவில் ஏற்றமும் சிறப்பும் பெற்று நமது மண்ணை உலகெங்கும் மணம வீச வைக்கும் ஒரு உயர்ந்த மனிதருமான பரதநாட்டிய குரு கல்யாணசுந்தரம் அவரகளை  சந்தித்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியும்,  திருப்தியும்  ஏற்பட்டது. குரு கல்யாணசுந்தரம் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து நாட்டியக்கலைக்கு மென்மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல அருள்மிகு மகாலிங்க சுவாமியை வேண்டி வணங்குகிறேன்.

k.Murthy

2 comments:

  1. Three yrsback I saw sriK.S.performing NATTUVANGAM in our SWAMYs procession during VASANTHA UTSAVAM and his students performed NATYANJALI.Heis very simple man and his whole family is devoted to our SWAMY.I pray our SWAMY to call him along with studenes in different styles of dances to perform MARUDHA NATYANJALI ON next SIVARATRI DAY.FRM S.Venkataraman of TDR in Mumbay. E mail s.venkat1943@gmail.com

    ReplyDelete
  2. FRM S.VENKATARAMAN MUMBAI.THREE YRS BACK I saw SRI.

    ReplyDelete