Sunday, October 16, 2011

அபிமன்யூ ஆன அபீர் முகம்மது -By Sridhar

அபிமன்யூ ஆன அபீர் முகம்மது 
ஆம் கபீர்தாசை  பற்றி கதையாகத்தான் கேட்டிருக்கிறோம்  ரஸகானையும்   ரசித்து படித்திருக்கிறோம்  
ஆனால் திருவிடைமருதூர் வாசிகளான நாம் அபிர் முகமதை நேரேயே பார்த்திருக்கிறோம்.

அபீர்முகமதின்  தந்தை ஒரு மிக மிக ஏழ்மையான இஸ்லாமியர்

தினமும் வெற்றிலை கொடிகாலில் இருந்து மஹாதானவீதியில் உள்ள பல வீடுகளுக்கு வெற்றிலை விநியோகம் செய்வது. அந்த  தொழிலில் தான் அவர்களது குடும்ப ஜீவனம்.

மஹா பெரியவரின் திருவிடைமருதூர் நீண்ட கால முகாமில் பூஜைக்கு அதிகாலையில்  தினமும் வெற்றிலை கொடுத்ததால் அவரிடம் ஒரு நீண்டகால பற்று. அதன் பலனாக அவருக்கு கடைதெருவில் உள்ள சங்கர மடத்தின் வாசலில் வெற்றிலை விற்பதற்கு இலவச அனுமதி

இப்படியாக தொடங்கியதுதான் அந்த குடும்பத்தின் பின்னணி.

ஒரு கால கட்டத்தில் அந்த இஸ்லாமிய அன்பர் தனது மகன் அபீர் முகம்மதுவை அழைத்து 
ஏய் இந்த தட்டில் உள்ள வெற்றிலைகளை எடுத்துகொண்டு அக்ரஹாரத்திற்கு செல்
நான் சொல்லும் வீடுகளுக்கெல்லாம்  சென்று வாசலில் நின்று கொண்டு அவர்களை கூப்பிடு அவர்கள் வருவார்கள் வெற்றிலையை கொடுத்துவிட்டு வா. 
எக்காரணம் கொண்டும் நீ   அவர்களது வீட்டிற்க்குள் செல்லாதே.........

இப்படி தொடங்கியதுதான் அபீர் முகம்மதின் திருவிடைமருதூர் மஹாதானவீதியில்  பழக்கம். 
ஒரு முறை தலைமை ஆசிரியர் திரு. கோபால்சாமி அய்யங்கார் வீட்டிற்க்கு வெற்றிலை கொடுக்க அபீர்முகமது செல்ல

அவர் படிக்கிற வயசுல பள்ளிகூடம் போஹாம என்னடா இது

நாளேலேந்து பள்ளிகூடம் வா என சொல்ல 
இந்த வேலை செய்யல்லேன்னா வீட்டுல சோறு கிடைக்காது சாமின்னு அபிர்முஹம்மது சொல்ல 
எங்காத்துல  சாப்பூடுப்டு பள்ளிகூடம் வா

புஸ்தகமெல்லாம் நான் வாங்கிதரேன்னு   கோபால்சாமி அய்யங்கார் பதில் சொல்ல

இப்படியாக ஆரம்பித்ததுதான் அபீர்முஹம்மத்தின் பள்ளிகூட பருவம்

பள்ளிகூடத்தில் எனது சித்தப்பா வாஞ்சிசார் வாஜபேயர் வீட்டு  வைத்து என்னும் வைத்தியநாதன். T.R.நாகராஜன் (வாய்கால்  கரை)  நாகு, G.P.சாமிநாதன் மேலும் சிலர் அபீர்முகமதுக்கு  நண்பர்களானார்கள்.

ஒருமுறை  வாஞ்சிசார்  மேலேகூறிய அவர்களது சிநேகிதர்களோடு 
 
அபீர்முகமதையும்  தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்களாம்.

இது கண்ட எனது தாத்தா அவர்கள் 
எனது சித்தப்பாவை பார்த்து
வாஞ்சி யாருடாது  சிகை(குடுமி)    வெச்சுக்காம (மற்றபடி மேற்கண்ட அனைவரும் குடுமிதான்)  உன்னோட கூட வந்துருக்கறது என்று அதட்டலாக கேட்க 
அந்த கணமே சற்று தடுமாறிய வாஞ்சி சார் 
இல்லப்பா இவன் பேரு அபிமன்யு

இவாள்லாம் மடவிளாத்துல ஜாகை இருக்கா இவன் என் கூட படிக்கிறான் சும்மா இன்னிக்கி அழைச்சிண்டு வந்தேன் என்று கூறி   ஒருவாறு சமாளிக்க

அவ்வளவுதான் அன்று முதல் அபீர்முகமதின் பெயர் அபிமன்யுவானது.

மிக மிக குறுகிய கால கட்டத்தில் அபிமன்யு மஹாதான வீதியில் அனைத்து மாணவர்களுக்கும் நண்பனானார்.

அனைத்து வீடுகளிலும்  என்ன அபிமன்யு எப்படி இருக்க என விசாரிக்கும் அளவுக்கு தனது பழக்கவழக்கத்தின் முலம் பிரபலமானார்.

இதன் காரணமாக மகாலிங்கசாமி கோயிலுக்கும் போவார், மாரியம்மன் கோயிலுக்கும் போவார்.  

பின்னாளில் பெரும்பாலோருக்கு அபிமன்யுதான் அபிர்முகமது என தெரிந்த பின்னரும் அவரை யாரும் நிராகரிக்க முடியாத அளவுக்கு பழக்க பட்டு விட்டதால் தெருவில் யாரும் அவரை நிராகரிக்காமல் அனைவரும் ஒருவாறு ஏற்று கொண்டு  விட்டார்கள்.

அபிமன்யுவும் தன்னை படிக்க வைத்த கோபால்சாமி அய்யங்காருக்கு புஸ்தகத்திற்காக அதிக செலவு ஏதும் வைக்கவில்லை 

ஆறாம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடம் படித்து கொண்டுதான் வந்தார். ஒருவாறு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்ல முடியாமல் படித்து கொ..............ண்.........டே...........................
இருக்கும் போது 
திரு. சிவசாம்ப அய்யர் அவர்கள்   அபிமன்யுவை கூப்பிட்டு ஏய்  நீ படிச்சது போறும் ஏதாவது வியாபாரம் பண்ணி ஜீவனம் பண்ணலாம் 
நாளேலேந்து நீ ஒண்ணும் பள்ளிகூடம்  வரவேண்டாம்.
நீ போய் பேபியை(பேபிசார்)   பாரு என்று கூற

வருத்தத்துடன் பேபி சாரினை பார்க்க அபிமன்யு செல்ல
பேபிசார்  அபிமன்யுவிடம் இங்க பார் கடைதெருவுல ஒரு கடை வாடகைக்கு வர்றது
நான் பேசி அதை வாங்கி தறேன் ஒனக்கு கொஞ்சம் பணமும் தறேன் நீ கறிகாய் கடை வியாபாரத்த பண்ணி முன்னுக்கு வர வழிய பாரு படிச்சதெல்லாம் போறும் என்று அவரை தேற்றி அனுப்பினார்.

 ஒருவாறு இதனை ஏற்று கொண்ட அபிமன்யுவுக்கு   பேபி சார், கண்ணன் சார் மற்றும் விஸ்வனாதசார் ஆகியோர் உதவி செய்து ஒருவாறு கறிகாய் கடை வியாபாரம் தொடங்கியது.

பெரும்பாலான ஆசிரியர்களும் மற்றும் அனேக மஹாதான தெரு வாசிகளும் அபிமன்யுவிடம் கறிகாய்களை வாங்கலானார்கள்.
பல ஆசிரியர்கள் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக அவரே சென்று கறிகாய்களை கொடுத்து பணத்தை பெற்று வருவார். 
மஹாதான வீதியில் பெரும்பாலான வீடுகளில் திருமணம் நடந்தால் அபிமன்யுதான் கும்பகோணம் சென்று பாலக்கரை மார்க்கெட்டில் கறிகாய் இலை போன்றவைகளை வாங்கி  கொடுப்பார்.
 
பல வீடுகளுக்கு அவர் கூறியது தான் விலை, சில வீடுகளில் அவர்கள் கொடுப்பதுதான் பணம்.
அபிமன்யுவுக்கு இருவரும் ஒன்றுதான்.  யாரிடமும் வம்போ சண்டையோ கிடையாது. 
இப்படியே தான் அபிமன்யு அபிமன்யுவாகவே எறத்தாழ ஒரு  நாற்பது ஆண்டு காலம் கறிகாய் கடை நடத்தி வந்த   அபிமன்யுவுக்கு மிக மிக காலந்தாழ்ந்த திருமணம்.
 
ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஒரு நாள் தனது குழந்தையை கடைக்கு அழைத்து வந்த அபிமன்யுவை பார்த்த வாஞ்சிசார் 
குழந்தைக்கு என்னடா பேர் வச்சுருக்க அபிமன்யு   என  கேட்க 
கோமளாடா என பதில் சொல்ல 
என்ன கோமளா........வா.................. 
ஒன் விட்டுல ஒம்பொண்டாட்டி  ஒண்ணும் சொல்லலையாடா  
என்னடா  சொல்றத்துக்கு?

வாஞ்சி........................  
என்ன மொதமொதல்ல சாப்பாடு போட்டு படிக்க வச்ச
கோபால்சாமி அய்யங்கார் வீட்டு மாமிக்கு கோமளவல்லின்னு 
பேருடா.
அதுக்காத்தான் எனக்கு மொத மொதல்ல  புள்ள பொறந்தா
கோபால்-ன்னோ அல்லது பொண்ணு பொறந்தா கோமளான்னோ வைக்கலாம்னு நினைச்சேன்

பொண்ணு பொறந்துட்டா............   கோமளான்னு வச்சுட்டேன்............. அவ்வளவுதான்
இதுல என்னடா  தப்பு.

எழுபது எண்பதுகளில் நான் படித்துகொண்டு இருக்கும் கால கட்டத்தில் மஹாதான தெரு வாசிகள் அல்லது உறவினர்கள் யாரேனும் வெளியூர் சென்று விட்டு பஸ்ஸில் திருவிடைமருதூர் திரும்பி வந்தால் அபிமன்யு கடையினை தேடி செல்வார்கள்

அபிமன்யு அவர்களுக்கு ஒரு மாட்டு வண்டியினை ஏற்பாடு செய்து லக்கேஜூகளை தூக்கி வைத்துவிட்டு வழியனுப்புவார்.

சிலர் லக்கேஜுகளை அவர் கடையிலேயே வைத்து விட்டு செல்வார்கள் பின்ன்னர் சைக்கிளில் வந்து எடுத்து செல்வார்கள்.

அல்லது சிலர் அபிமன்யுவையே  வீட்டுக்கு வந்து கொடுத்துவிட சொல்வார்கள்

அதனையும் அவர் சர்வ சாதாரணமாக சைக்கிளில் வந்து கொடுத்துவிட்டு போவார்.

நான் நன்கு அறிந்த.............. மேலும் நம் ஊரில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை பற்றி............... நமது மூர்த்தி அண்ணா  அவர்களது சென்ற வார கட்டுரை முலம் என்னை நிறைய எழுத வைத்து விட்டார்.

என்ன செய்வது நான் அறிந்த இரண்டே இரண்டு சம்பவங்களை மட்டும் கூறி இதனை நிறைவு செய்கிறேன்.

காலஞ்சென்ற வெங்கட்ராம பாகவதர் வீட்டில் இருக்கும் ராதாகிருஷ்ணன் படத்திற்கு ஒவ்வொரு வருடமும் தைபூச தினத்தன்று ராதாகல்யாணம் நடக்கும். 

அவரது சிஷ்ய கோடிகள் அனைவரும் அன்று வருவார்கள் பூசத்திலும் கலந்து கொள்வார்கள் ராதா கல்யாணத்திலும் கலந்து கொள்வார்கள்.

அபிமன்யுதான் கறிகாய் பால் தயிர் முதலியவைகளை  ஏற்பாடு  செய்து தருபவர். 

ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களும் பாகவதரின் சிஷ்யர் என்ற முறையில்
தைபூச தீர்த்தவாரிக்கும் ராதா கல்யாணத்திற்க்குமாக  திருவிடை மருதூர் விஜயம் செய்தார்.

அவர் அப்போது பாகவதர் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
அவருக்கு முன்பாக  ஒரு பெரும் கூட்டம்.

அப்போது ஏ அபிமன்யு அம்மா உன்ன காப்பி சாப்பிட உள்ள வர சொல்றா என்று உரத்த குரலில் ஒரு சத்தம்.
அந்த சத்தமான குரலின் சொந்தக்காரர்  பாகவதர் வீட்டு சூரி. 
ஊர்காரர்கள் அனைவரும் அமைதி.  

இதை கேட்ட கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் "யாருப்பா அபிமன்யு" உள்ள போ கூப்புடறா  பாரு என்றார். 
ஸ்வாமிகள் சொல்வதை கேட்ட வெங்கட்ராம பாகவதர் கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் காதருகில் மெதுவாக

இந்த அபிமன்யு சிறு வயது முதல் இந்த தெருவிலேயே  பழகி, எங்களது  வீடுகளிலேயே  சாப்பிட்டு வாழ்ந்து வருபவன்

இவனது உண்மையான பெயர் அபிர்முகம்மது. 

அனைத்து விசேஷங்களுக்கும் இவன் சரீர ஒத்தாசை செய்வான் என்று கூறினார்.
அன்று இரவு பாகவதர் வீட்டில்  கிருஷ்ண பிரேமி   சுவாமிகளின் உபன்யாசம் 

பக்த விஜயம் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்

ஸ்வாமிகள் பஹவானிடம் பக்தி என்றால் என்னவென்று தென்னாட்டு ஆண்டாள்  முதல் வடநாட்டு மீரா வரை அனைவரையும் குறிப்பிட்டு விட்டு 
கடைசியில் கபிர்தாசரும் ரஸகாணும் நமது நாடு முழுவதும்  பிறந்திருக்கிறார்கள் 
ஏன் இந்த ஊரில் கூட  
இந்த அபிமன்யு போல் என்று கூறி உபன்யாசத்தை முடித்தார்.

 நான் சில மாதங்களுக்கு முன்னர் புத்தகங்களின் மொழி மாற்றம் சம்மந்தமாக திருமதி சாரு நிவேதிதா தமிழில் எழுதிய ஷெனாய் இசை கலைஞ்ர் உஸ்தாத் பிஸ்மில்லாகான்   அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படித்தேன்.

பிஸ்மில்லாகான் அவர்கள் தனது மாமா மூலமாக காசியில் வந்து தங்கி தனது ஆறாவது வயதில்
இருந்து  ஷெனாய் வாசிக்க கற்றுகொண்டாராம்.

முழுவதும் கற்று  கொண்டவுடன் அவரது மாமா பிஸ்மில்லாகானிடம் இரண்டு உறுதிமொழிகளை கேட்டு பெற்று கொண்டாராம்.
அது என்ன உறுதிமொழி தெரியுமா. 
என்னதான்  நாம் முஸ்லிம்  குடும்பமாக  இருந்தாலும் சங்கீத பரம்பரையில் வந்த நமக்கு சரஸ்வதிதான் முழு முதல் கடவுள்.
நமது குலம் பல தலைமுறைகளாக காசியில் கோயிலில்  விஸ்வநாதர் முன்னர் தினமும் மாலையில் ஷெனாய் இசை வாசித்து வருகிறது.   
 ஆகவே நாம் நமது வாழ்நாள் முழுவதும் காசியில்தான் வசித்து பின்னர் உயிரை விடவேண்டும்.

எக்காரணம் கொண்டும் வேறு ஊரில் நிரந்தரமாக குடியேறலாகாது. 
இதை நீ உனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தாகவேண்டும்.

 பிஸ்மில்லாகானுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா 2001 - ம் வருடம் அளிக்கப்பட்டது. 
பிஸ்மில்லாகான் மிகுந்த உடல் நலிவுற்ற செய்தி கேட்டு அந்நாளைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள்  சிறப்பு ஏற்பாடு செய்து அவரை டெல்லிக்கு வரவழைத்து  AIIMS - ல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து ஒரு லட்ச ருபாய் பணமும் கொடுத்து

அவரை நேரில் சந்தித்து பிஸ்மில்லா அவர்களே

நீங்கள் நமது தேசிய சொத்து

வயதான இந்த காலத்தில் நீங்கள் டெல்லியிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டும்.

நான் உங்களுக்கு அரசு சார்பில் ஒரு வீடு ஏற்பாடு செய்து தருகிறேன்.

 நீங்கள் அதற்கு சம்மதித்து உங்களது ஒப்புதலை தரவேண்டும் என வினவினார். 
மறுத்து விட்டார் பிஸ்மில்லா 
நான் காசிக்கு தான் செல்வேன் என்னை கவனித்து கொள்ள அங்கு விஸ்வநாதர் இருக்கிறார். 
எனவே எனது இறுதி நாட்களை நான் காசியிலே தங்கி கழித்து கொள்கிறேன் என சொல்லி   

காசியில்தான் தனது வாழ்நாளின் இறுதி வரையில் இருந்து காலமானார்.

மேற்கண்ட இந்த சம்பவத்தை நான் நினைவு கூற காரணம்

நமது மூர்த்தி அண்ணா  அபிமன்யு சொன்னதாக சொன்னாரே

நான் திருவிடைமருதுரிலேயே சுகமாக இருக்கிறேன் என்று

அதனால் தான் சொல்கிறேன்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே 
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே
இதை வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ
இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ?

No comments:

Post a Comment