உயர்ந்த மனிதர்
இரு முறை TOSAவுக்காக திருவிடைமருதூர் சென்ற போது நண்பர் ஒருவரை சந்திக்க முயன்றேன். முடியவில்லை. ஆகஸ்டு இறுதியில் நம்ம ஊரைக் கடந்து செல்ல நேரிட்டது. மஹாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு எப்படியும் என் நண்பரைப்பார்த்து விட முடிவு செய்தேன்.
அவர் எப்போதும் உட்கார்ந்து இருக்கும் கடைக்கு சென்றேன். கடை பூட்டியிருந்தது. அவரது பெயரைச்சொல்லி அக்கம்பக்கம் விசாரித்தேன்.
“கீழ மாரியம்ம்மன் பக்கத்து சந்தில் ஒரு கொட்டகையில் அவர் மதிய உணவுக்குப்பின் ஓய்வு எடுத்துக்கொள்வார். அங்கு போனால் பார்க்கலாம்.” என்று ஒரு அன்பர் கூறினார்.
நான் ஒரு காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் மனைவி, தாயார், தம்பி, அவன் மனைவி, இரண்டு தங்கைகள் என ஏழெட்டு பேர் இருந்தனர். பகல் மணி இரண்டைத்தொட்டது.
“அங்கே சென்று பார்க்கலாமா?” என்று வினவினேன்.
“வேண்டாம்னு சொன்னால் விட்டுடப்போறயா?” தங்கை ஒருத்தி முணுமுணுத்தாள். பாவம், அவளுக்கு பசி. உடனே சாப்பிட்டாகனும்.?
“முக்கியமான விஷயம்னா பார்த்துதானே ஆகனும்.” என்றாள் மனைவி.
“அரை மணி நேரம் பார்க்கலாம். அவரைப்பார்க்க முடியாட்டி நாம புறப்படலாம் ” என்று சொல்லி காரை கீழ மாரியம்ம்மன் பக்கத்து சந்துக்கு விடச்சொன்னேன்.
ஏப்படியோ விசாரித்து அந்த கொட்டகையையும் கண்டு பிடித்தேன்.ஆனால் அங்கு யாருமே தென்படவில்லை. ஏதிர்ப்புறம் தென்னந்தோப்பு. அங்கே காரை நிறுத்தினார் என் ஒன்று விட்ட தம்பி..கொட்டகைக்கு பக்கத்தில் இரண்டு குடிசைக்ள் தென்பட்டன.ஒரு குடிசையின் வெளியே பெண்மணியொருத்தி தன் எட்டு வயது மகனுடன் அமர்ந்திருந்தாள். அவளிடம் என் மனைவி விசாரித்தாள்.
“அங்கேதானே மதியம் தூங்குவார்.” என்று கூறியபடி தன் மகனிடம்,” டேய். ஜான், தாத்தா தூங்கறாரா பார்த்துட்டு வா”என்றாள்.
அதே கொட்டகையை ஒரு நோட்டம் விட்டு திரும்பிய பையன்“அம்மா, அங்கே யாருமே இல்லை” என்று கூறியபடி ஓடிப்போனான்.
அப்போது சைக்கிளில் வந்த ஒரு வாலிபரிடம் எங்களைப்பற்றி அந்தப்பெண் கூறினாள்.
“கடைத்தெருவில் சாப்பிடப்போயிருப்பார்; அஞ்சே நிமிஷம், நான் போய்ப் பார்த்திட்டு வந்திடறேன். நீங்க எல்லாம் நெழல்ல போய் உக்காருங்க” என்று கூறிய படி சைக்கிளை வேகமாக மிதித்தபடி மறைந்தார்.
கூட வந்தவர்க்கெல்லாம் பசியெடுக்குமே என்று அஞ்சினேன். யாரைப்பார்க்க இந்தப்பாடு படுகிறான் இவன் என்று எல்லாருமே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
சைக்கிள் ஆசாமி மீண்டும் வந்தார். “ஹோட்டல்லே சாப்படுகிறார். பிளஷர்லே பத்துபேர் உங்களைப்பார்க்க வந்திருக்காங்கன்னு சொல்லிட்டேன். இப்ப வந்திடுவார்” என்றார்.
அவரைப்பற்றி சிந்தனையில் ஆழ்ந்தேன்.
அறுபதுகளில் கடைசியாகப்பார்த்தேன். தினம் அரை கவுளி வெற்றிலை வீட்டில் கொண்டு கொடுப்பார். கடை வீதியில் அவரது கடை இருந்தது. அவர் வராத நாட்களில் என் பாட்டி அவரது கடைக்குசென்று வெற்றிலை வாங்கிவரச்சொல்வார். அவர் கடை வாசலில் போய் நிற்பேன். என்னைப்பார்த்ததுமே அவரது முகத்திலே ஒரு சிரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பு அது. இப்போதும் அதே சிரிப்பு சிரிப்பரா?
பின்னோக்கி வாரப்பட்ட அவ்ரது மழைமுகில்கள் போன்ற கருப்பு முடி அந்தக்கால ஸ்த்ரீ பார்ட் நடிகர் போல அவரது தோள்களைத்தொட்டிடும். இப்போதும் முடி நரைத்திருந்தாலும் நீளமாக அவரது தோள்களைத்தொட்டு விளையாடிடுமோ?
என்னைவிட பத்து வயது பெரியவர். அவரைப்பார்த்ததும் அவர் கால்களில் விழுந்து கும்பிடலாமா? அவரை ‘அய்யா’ என்று அழைப்பதா? ‘சார்’ என்று அழைப்பதா?
என்னைப்பார்த்ததும் அவரால் அடையாளம் கண்டு கொள்ளமுடியுமா?
எனது எண்ணச்ச்ங்கிலியை அறுத்தது, அருகே வந்து கிறீக்ச்சிடடு நின்ற கார்.
முன் இருக்கையிலிருந்து கதவைத்திறந்து வெளியே வந்தார் அவர்.
இவரைப்பார்க்கவேண்டும் என்றுதான் நான் துடித்துக்கொனண்டிருந்தேன். முதுமை அவரை பாதித்திருந்தது. ஆனால் அவரது முகம்! ஐம்பது வருடங்களுக்குப்பின்னரும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. வெள்ளை வேஷ்டியும், முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். நேவி கட். நரைத்த முடி.
‘டேய், மூர்த்தியா?’ என்று என்னை அடையாளம் கண்டுகொண்டு மகிழந்திடுவார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. சற்றே ஏமாற்றம் எனக்கு.
அருகே வந்து நின்றவர்,” நீங்கதானா என்னைபபார்க்கனும்னு சொன்னது?.”
ஏன்னை இவரால் அடையளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று எனக்கு புரிந்தது. என் மனசிலே ஒரு சின்ன வலி.
‘என்னை ஞாபகம் இல்லையா? உங்க கடை வசலில் நின்று கொண்டு ஒரு அணாவுக்கோ இரண்டு அணாவுக்கோ வெற்றிலை வாங்கிக்கொண்டு, கடையை விட்டு நகராமல் நின்று கொண்டிருப்பேன். ‘நீ போலயா? லேட்டாச்சே.’ என்று சொல்லி என்னை விரட்டுவீர்களே. எல்லாமே மறந்து போச்சா?’ வாய் விட்டு‘ஓ’ என்று அழ வேண்டும் போல இருந்தது. சிறு வயதில் நமக்கெல்லாம் நிறைய ஹீரோக்கள் இருந்தனர். ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், கார் ஓட்டுபவர்கள், க்ரீஸ் கலையாத சட்டையுடன், மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட டைனமொவுடன் சைக்கிளில் வரும் சீனியர் மாணவர்கள், கோடை விடுமுறைக்கு பம்பாய், தில்லி, கல்கத்தா என்று சென்று வரும் நண்பர்கள் - இப்படியாக நமக்கு ஏராளமான ஹீரோக்கள்! இந்த லிஸ்டில் எதிலுமே வராத இந்த நபர் எனக்கு ஏப்படி ஹீரோ ஆனார்? மகாதானத்தெருவில் அநேகமாக எல்லா வீட்ட்டிலும் அவர் சகஜமாகப்பழகுவார். அவருடைய சம வயதுக்காரர், மற்றும் அவரைவிட வயதில் இளையவர் எல்லாரிடமும்ந்ன்றாகப்பழகுபவர். கிரிக்கெட் ப்ராக்டீஸ் போது சிலநாள் வருவார். முதல் பந்தில் க்ளீன் பௌல்டு ஆகிவிட்டு,’என்ன? நான் அவுட்டா?’என்று நடு பிட்ச்சில் நின்று கொண்டு கேட்பார். கங்கு, ’அதிலே என்னடா சந்தேகம்’ என்று சொல்ல, “ இதுக்குதான் நான் பேட்டிங்க்கே வேண்டாம்னு சொன்னா எவனாவது கேக்கிறீங்க்களா?” என்று சிரித்துக்கொன்டே கேட்பார். இப்படியெல்லாம் அவரைப்பார்த்து அவர் எனக்கு ஒரு ஹீரோவாக ஆனார்.
என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டென். சில விநாடிகள் கண்களை மூடிக்கொண்டவர் மீண்டும் என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
“இப்ப தெரிஞ்சுடுத்து. நல்லா ஞாபகம் வந்துடுத்து. மாலி சாரோட தம்பிதானே நீங்க?”
“இல்லை, நான் சிவசாம்ப அய்யர் பேரன். மாலி சார் அவரோட பிள்ளை.”
“அப்படியா?” என்று கூறியவர், மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.
“நீங்க ராஜகோபாலன்தானே?” என்றார்.
“இல்லை, நான் அவர் தம்பி, என் பேரு மூர்த்தி.”
“ஆமாம், நீங்கதானே ஸ்கூல்லே ரோம்ப நல்லா படிப்பேளே. மாலி தங்கை கூட உங்ககூட படிக்ச்சா இல்லையா? ஒங்க ஆகம் கூட நன்னா ஞாபகம் வந்துடுத்தே” வியாட்நாம் வீடு சிவாஜி போல பேசினார்.
என் அம்மாவை அறிமுகப்படுத்தினேன். நெகிழ்ந்து போனார்.
“இந்த ஊர்லே இருந்த ஒரு மஹாபுருஷர் ஒங்கப்பா. அவரோட குடும்பத்து மக்களை நான் சந்திப்பேன்னு சொப்பனத்திலே கூட நெனக்கல்லே. ஓங்க ஆசிர்வாதம் நேக்கு எப்பயும் வேணும்” என்று கூறியவாறு அம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தார். நான் இவரை கடைசியாப்பார்த்த போது சின்னப்பையன். என்னை எத்தனை வருஷத்துக்கு ஞாபகம் வ்ச்சிண்டு, என்னைப்பார்க்க இவ்வளவு நேரம் இங்கெயே எனக்காக காத்திண்டு இருக்கிறதைப் பாத்து---- “ அவரது இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. கூட இருந்த எல்லோருமே அமைதியாகினர். சில நிமிடங்கள் இறுக்கம்.
“எப்படி இருக்கீங்க “ஏன்று கேட்டேன்.
“ஏனக்கென்ன குறைச்சல்? மாலிங்க ஐயர் தோட்த்தில இருக்க எடம். பக்கத்திலே மேட்டூர் சாமியார்., போதேந்திர ஸ்வாமிகள், போதாக்குறைக்கு இப்ப விட்டல் கோவிலும் பக்கத்திலேயெ.
ஜோதிர்மய மகாலிங்கம் ஆரம்பத்திலேர்ந்தே ஏன்னை நல்ல படியா கவனிச்சிக்கிறார். இந்த புண்ணிய ஸ்தலத்திலே வாழ்நாள்பூரா கழிச்சாச்சு. மஹாலிங்கம் யாராருக்கோ கேட்ட வரத்தை அள்ளளித் தருகிரார். அவர் அதிகமாகவே எங்கிட்ட கருணை காட்டறார். இல்லைன்னா இப்ப ஒங்களைப் பார்க்கிற இத்தனை பெரிய பாக்யம்.எனக்கு கிடைச்சிருக்குமா?”
இதை பாசம் என்று கூறலாமா? எழுபது வயது மனிதர் கண்ணீர் விட்டு அழுவதை எப்படி விவரிப்பது?
அவரிடம் விடை பெறும்போது எங்கள் எல்லோருடைய கண்களும் நனைந்திருந்தன.
மிகவும் சிந்தித்தேன். இது என்ன ஒரு வினோதமான பிணைப்பு? அவரும் நானும் ஒரே ஊரில் பிறந்தோம் என்ற ஒரே பிணைப்புதான். அப்படியானால் எல்லா ஊரிலும் இப்படி நிகழ்வுகள் உண்டா? பதில் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. நம்ம ஊர் மண்ணின் பெருமை அலாதியானது. இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவரும் சுவாசிக்கும் காற்றில் கலந்துவிட்ட அன்பு, பாசம், மதிப்பு, மரியாதை போன்ற குணங்களையும் தொடர்ந்து சுவாசித்து பழகி விட்டோம். இந்த பாசம் சாதி, மதத்துக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதை எங்கள் சந்திப்பு உணர்த்தியது.
அவர் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே. அவர் பெயர் அபி முஹம்மது. நாங்கள் அவரை அபிமன்யு என்றே அழைப்போம். மஹாலிங்க ஸ்வாமியை வணங்கிடும் முஹம்மதியர். மதக்கலவரம் என்ற இருட்டறையில் மெழுகுவர்த்தி ஏற்றும் மாமனிதர். ந்மது பிறந்த மண்ணை நாட்டுக்கே வழிகாட்டியாக்கும் உத்தமர்.. அபிமன்யு நாம் திருவிடைமருதூரில் பிறந்து வளர்ந்ததை ஒரு பெருமைக்குரிய விஷயமாக நினைக்கச் செய்யும் நூற்றுக்கணக்கான மாமனிதர்களில் ஒருவர்.
இவரை சிரம் தாழ்த்தி வணங்குவதில் நான் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன்.
மூர்த்தி
No comments:
Post a Comment