Saturday, September 14, 2013

Kavithai


உள்ளம் ஒரு கருவியாய் மாறி உருத்துகின்றதோ இறைவா
துள்ளுகின்றது ஒருபுறம் மகிழ்ச்சிதனை அடைந்தாலே - மனம்
அள்ளுகின்ற உன் நாமம் மறந்தபோதே துன்பமே
தெள்ள தெளிந்த எண்ணங்களில் வாழும் மன்னனே
வெள்ளம் போல் வந்திடுதே உன் நினைவு வந்தபோது
கள்ளமில்லா ஆனந்த  நீர்  துளிகள்  விழுகின்றதே கண்களிலே!

என்னையே அறியா இன்பம் பெருகுகின்றதே அதில்
உன்னையே அறிய துடிக்கின்றதே என் மனம் ஏனோ
மன்னவா மாசறுக்கும் தூயவா மாதவா மதுசூதனா
என்னவா இணையில்லா யாதவா கேசவா கோவிந்தா
என்றுமே உன்னையே மறவாத வரம் நல்காயோ வேங்கடவா !


ஒப்பிலாத அப்பனே ஒய்யார மூலவனே நாரணனே
உப்பிலாத அப்பனென ஊரினிலே பெயர் பெற்றாயோ
தப்பாமல் உனையே நாடுவோர்க்கு நலம் புரியும் பெம்மானே
எப்போதும் உன் நாமம் என் நாவினிலே நிற்க வேணுமே
அப்போதும் இப்போதும் எப்போதும் என் துயர் தீராயோ !
செருக்கழிந்து உருக்குலைந்து பருக்கும் இந்த உடல்
மரிக்கொழுந்து மணக்கும் உனது திருவடியில் வாராதோ
அரிககுமது மனத்திரையில் வெறுக்குமதுஉணர்வர்களுக்குள்
பிரிக்குமுறை மறந்திருந்து  உன் இணைப்புதான் வாறதோ!

விழிப்புடனே நான் இருப்பின் மன அலைகள்ஓய்வதில்லை
செழிப்புடனே நான் இருக்க எனது செருக்குதான்மாறவில்லை
அழியுமுடல் நான் பெற்றேன் பெற்றேனா உன் நாமம்தனை
பழித்திடாத வாழ்வு நான் பெறவே எனை தூக்கிவளர்ப்பாயே
எத்துனை சூட்சுமங்கள் இந்த புவியினிலே
அத்துனையும் நீ அன்றோ ஆண்டவனே - பூரண
சத்தியனே நீ அன்றோ காட்டிடுவாய் ஓர் வழிதனை
நித்தியமே உன் நாமம் மனதினிலே நிலைத்திடவே !
வாழ்வெனும் மாயமதை தந்தனையோ அல்லது
தாழ்வெனும் தரத்தினையே இணைத்தினயோ 
சூழ்வதெல்லாம் பகையாய் இருப்பினும் இறைவா 
விழித்திருந்தே எனை நீ காத்திடுவாய் என்றும் !
பிறந்தேன் புவியில் விழுந்தேன் புரண்டேன் 
மறந்தேன் எனையே நீ வாழ வைப்பதை எனினும்
திறந்தேன் என் மனமென்னும் கோவில்தனை 
பறந்தே வாராயோ என் இதயத்தில் அமராயோ இறைவா!
உருவமில்லா ஓரிடத்தில் இருந்த உறவே இன்று
கருவிலிருந்து உருவெடுத்து வந்ததோ அறியேன்
பருவமது வந்தபோது தெரிந்ததம்மா அந்த
கருணை கடவுள் தந்த இந்த மானிட ஜென்மமென
அரவணைத்து வளர்த்திட்டாள் இதனையே என் தாய்
மறந்தேனே அவள் செய்த தொண்டினை இன்று
மரம்போல் வளர்ந்தேன் வழி ஏதும் அறியாது
அறம் வளர்க்க மறந்தேன் ஊழியில் சிக்கினேன்
திறம் ஒன்றும் அறியேன் ஊண் ஒன்றே அறிந்தேன்
வரம் வேண்டும் ஆண்டவா என்றும் உன்னை நினையவே
  
கண்கள் பார்பதெல்லாம் கனவுகளே அய்யகோ
எண்ணங்கள் ஏற்பதில்லை அவைகளையே
மின்னும் நொடிப்பொழுதினில் மறைகின்றனவே
மானிட ஜென்மமெனும் இந்த பாழும் உடலே
எண்ணுவதோ நடப்பதில்லை மனமோ நிறைவதில்லை!
நுண்ணிய கருமங்கள் நிறைந்தனவே உலகினிலே
கண்ணியம் இருக்கின்றதோ தெரியவில்லை இங்கே
திண்ணமாக சொல்வேன் என் மனதினிலே அந்த
மன்னன் மாயவன் கண்ணன் உறைகின்றான் என்னுள்ளே !

 R SRIDHARAN (RBI)


1 comment: