Sunday, September 8, 2013

பாட்டி...!

பேருந்திலிருந்து இறங்கி கீழே கால் வைத்ததுமே, புலர்ந்து கொண்டிருந்த அதி காலைப் பொழுதின்   சில்லிப்பையும் மீறி  ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் ஊடுருவதை உணர்ந்தாள் ராகினி. ஆனால் இது புதிதல்ல; ஒவ்வொரு முறை சொந்த மண்ணில் கால் வைக்கும்  போதும்,  தனக்கு ஒரு அடையாளம் தந்த ஊர் மீது பாசம் கூடுவதையும்,  ஊரே தனக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வு மேலோங்குவதையும் அனுபவிப்பாள் அவள். ஒரு நிமிடம் கண்ணை மூடி அந்த பரவசத்தை அப்படியே மேலும் உள்வாங்கிக்கொள்ள முயன்றாள். கண்ணைத் திறந்த போது எதிரே அவள் தம்பி ரகு சிரித்த படியே நின்றிருந்தான். ' வாக்கா' என்று அவள் கையைப் பிடித்து குலுக்கியவன், குனிந்து அவள் பெட்டியை எடுத்துக் கொண்டான். அவனுக்கு ஒரு சிரிப்பைத் தந்து விட்டு,அவன் கையோடு கை கோர்த்தபடி கார் நிறுத்துமிடம் நோக்கி நகர்ந்தாள் ராகினி.

காரில் உட்கார்ந்து, அதைக் கிளப்பியவுடன் ரகு கேட்டான் ," முதல் முறையாக குழந்தைகள் ரெண்டு
பேரையும் நாலைந்து நாள் விட்டுட்டு வந்திருக்கியே, சமர்த்தாக இருப்பார்களா?"
.
ரகுவின் கேள்வி ராகினிக்கு ஊருக்கு வந்திருப்பதின் காரணத்தை நினைவு படுத்தியது. பரவசமெல்லாம் வடிந்து, இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.

" ஜனனி சமர்த்தா இருந்துடும். ஹரீஷ் தான் என்ன பண்ணுவான்னு தெரியலை, பார்க்கலாம்." என்றவள் தொடர்ச்சியாக தம்பி யிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

" என்னடா, அப்பா திடீர்னு BP , Chest pain -னு குண்டைத் தூக்கிப் போடறார்?"

" எல்லாம் பாட்டியோட படுகிற டென்ஷன் தானக்கா. இப்படியே பாட்டி இருந்தான்னா எனக்கும், அம்மாவுக்கும் கூட BP -லேர்ந்து எல்லாம் வந்துடும். ஒரு ராத்திரி கூட நிம்மதியா தூங்க முடிகிறதில்லை.."

" அப்படி சொல்லாதே ரகு, பாட்டி பாவம்.  தெரிந்தா செய்கிறாள் ? நான் ஆறு மாதம் முன்னாடி வந்த போதுதான் 
பாட்டியை டாக்டரிடம் check செய்த போது டாக்டர் தெளிவா சொன்னாரே, பாட்டிக்கு டிமேன்ஷியா வோட ஆரம்ப அறிகுறிகள் மாதிரி இருக்கு. போகப்போக மறதி அதிகமாயிடும். பழகிய மனிதர்கள், காரியங்கள் கூட கொஞ்சம் கொஞ்சமா மறந்து போக வாய்ப்பிருக்கு. வயசானா நிறைய பேருக்கு வருவதுதான்.சொன்னதையே சொல்வார்கள். செய்வதையே செய்வார்கள். சுத்தி இருக்கிறவங்கதான் பொறுமையாகவும், கவனமாகவும் பார்த்துக்கணும்னு. பாட்டியைச் சலிச்சுக்காதேடா."

" ஐயோ, அக்கா, எனக்கு பாட்டி மேல ஒரு கோபமுமில்லை .நல்லா கவனிச்சுகணும் னுதான் இருக்கு.ஆனால் நடை முறையில் தினம் தினம் பாட்டியை சமாளிக்கிறது எங்க மூணு பேரையுமே ரொம்ப drain  பண்ணி டறது.." என்றவன் ஒரு பெரு மூச்சு விட்டு தொடர்ந்தான்.

"முந்தாநாள் ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு ஹாலில் விளக்கு எரியறதேன்னு எழுந்து வந்து பார்க்கிறேன், 'பொ ழுது விடிந்தால் தீபாவளி இல்லையா? அதான் எண்ணையைக் காய்ச்சி, வெந்நீரைப்  போட்டுட்டு, உங்களையெல்லாம் எழுப்பலாம்னு இருந்தேன்' என்கிறாள்.அரை லிட்டர் எண்ணையை வேறு காய்ச்சு வைச்சிருக்கா.அவ்வளவுதான். அதோடு அன்னிக்கு ராத்திரி எல்லோருக்கும் தூக்கம் போச்சு. நீயே சொல்லு. அடுத்த நாள் நான் எப்படி ஆபீசுக்கு போகிறது?"

ராகினிக்கு ரகு சொல்வதின் நியாயம் புரிந்தது. அமைதியாக கண்ணை மூடிக்கொண்டாள்..

உயரமான, ஒல்லியான தேகத்துடனும், எப்பவும் இப்போதுதான் குளித்து விட்டு வந்த மாதிரி தூய்மையாக, மடிப்பு கலையாத புடவையுடனும், நெற்றியில் துலங்கும் திரு நீறுடனும் சாந்தமும், அன்பும், சிரிப்பும் நிறைந்த முகமுமாக பாட்டி மனக்கண்ணில் வந்து நிறைந்தாள். ராகினிக்கு வாழ்க்கையின் முன்னுதாரணமே அவள் பாட்டிதான்.பாட்டியால் முடியாத காரியம் எதுவும் இருக்குமா என்று நினைத்து,நினைத்து வியந்து போவாள் ராகினி. யாருக்காவது உதவி தேவைப் படு கின்றதென்றால் வலியப்போய் செய்வாள்.அவர்கள் பகுதியில் பசு மாடு யார் வீட்டில் கன்று ஈன்றாலும்  கூட இருந்து கவனிப்பது முதல் இளம்பெண்களுக்கு பேறு காலம், குழந்தை வளர்ப்பில் உதவி செய்வது வரை, வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு எளிய சமையல் குறிப்புகள் வழங்குவது முதல் கல்யாணம் போன்ற விழாக்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது வரை , அழகழகான கோலங்கள் போடுவது முதல் கொள்ளை கொள்ளை யாக பாட்டுக்களும், சுலோகங்களும், புராணக்கதைகளும் தெரிந்து வைத்திருப்பது வரை பாட்டி ஒரு பல்கலைக்கழகமாகவே தோன்றினாள். எதிரிலிருப்பவரின் வயதுக்கும் ரசனைக்கும் ஏற்றவாறு பேசுவதும், பழகுவதும் பாட்டிக்கு கை வந்த கலை.பாட்டியுடன் ஒரு முறை அறிமுகமான யாருமே அவளது அன்பின் ஆளுமையில் ஆகர்ஷிக்கப் பட்டு விடுவார்கள். அதிரப் பேசாமல், ஒருவரையும் அதிகாரம் செய்யாமல், ஒவ்வொருவரையும் அவரவர் பலம், பலஹீனங்களை உணர வைத்து அவர்கள் பிரச்சினைக்கு அவரவரே தீர்வு காணும் வழியைக் காட்டும் ஆற்றல் பாட்டிக்கு இருந்தது.


ர கு போட்ட கார் பிரேக், வண்டியின் வேகத்தைக் குறைத்ததுடன், ராகினியின் மனோ  வேகத்தையும் குறைத்து அவளை நனவுலகக்கு கூட்டி வந்தது. தங்கள் தெருவை நெருங்கி  விட் டதையும்,தெரு முனையில் அப்பா நிற்பதையும் பார்த்தாள்.

ரகுவிடம் கேட்டாள் ," ஏண்டா அப்பா இந்த பனியிலே இங்கு வந்து நிற்கிறார் ?"
" நான் கிளம்பும் போதே அப்பா தெரு முனைக்கும், அம்மா வாசலுக்கும் வந்து நின்னாச்சு அக்கா."

காரை நிறுத்தி அப்பாவை ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அம்மா எதிர் கொண்டு வரவேற்றாள்.
" நீ வந்திருப்பது ரொம்ப சந்தோஷம் என்றாலும், சின்னக் குழந்தைகளை இப்படி விட்டுட்டு வந்ததில் எனக்கு இஷ்டமே இல்லை." என்றாள் அம்மா.

" நீ கவலைப்படாதே அம்மா, ஜனனியையும்,ஹரீஷையும் அவங்க அப்பாவும், பாட்டியும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள்."  என்ற படி பாட்டியின் அறையை நோக்கித் திரும்பினாள் ராகினி.  உடனேயே அம்மா ," இரு ராகினி, பாட்டி ராத்திரி பூரா    அரை மணிக்கொரு தரம் எழுந்து வந்து நீ வந்திட்டயா ன்னு பார்த்துக் கொண்டே இருந்தார்.இப்போதுதான் கொஞ்ச நேரமாக அசந்து தூங்குகிறார். நீ குளித்து விட்டு வந்து டிபன் சாப்பிடு.அதற்குள் பாட்டி எழுந்து கொள்வார்."என்றாள் .

ராகினி எல்லோருடனும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து  விட்டு குளித்து விட்டு வந்தாள் . பாட்டியின் அறைக்கதவு திறந்திருந்தது.ராகினி பாட்டியை பார்க்க விரைந்தாள். அதற்குள் அம்மா பாட்டியை குளிக்க வைத்திருந்தாள். அப்போதுதான் காபி குடித்து முடித்து டம்ளரை கீழே வைத்த பாட்டி, ராகினியைப் பார்த்தவுடன் உடலும், முகமும் மலர, இரு கரம் நீட்டி அவளை வரவேற்றாள்.   ராகினி ஓடிச் சென்று பாட்டியைக் கட்டிக் கொண்டாள்.

" எப்படி இருக்கே பாட்டி ?" 


" எனக்கென்ன, எல்லாரையும் கஷ்டப்படுத்திண்டு , பூமிக்கு பாரமா இருக்கேன்."

" அப்படிச் சொல்லாதே பாட்டி, நீ நினைச்சாக் கூட உன்னால் யாரையும் கஷ்டப் படுத்த முடியாது."

" இல்லை ராகினி . சொல்லும், செயலும் சரியா, சுயமா இருக்கிற வரையிலும்தான் மனுஷாள் இருக்கணும் " 
என்ற பாட்டி " அம்மாவிடம் சொல்லி காபி கொண்டு வரச் சொல்லு.இன்னும் குடிக்கலை ." என்றாள்.

ராகினி காலி  தம்ளரை காண்பித்து," இப்போதானே பாட்டி குடிச்சே " எனவும், பாட்டி குழந்தை மாதிரி சிரித்த படியே " மறந்திட்டேன்" என்றாள். ராகினியின் கன்னத்தை தடவய வாறே ," எப்படி வந்தே குழந்தே? பிரயாணம்  சௌகரியமாக இருந்ததா?" என்று கேட்டாள். 

" பஸ்சில்தான்  வந்தேன் பாட்டி , நன்றாகத் தூங்கினேன் ." என்று பதில் சொல்லும்போது, அவள் அலைபேசி ஒலித்தது. அவள் மாமியார் பேசினார். "நல்ல படியா போய்ச் சேர்ந்தியா ராகினி, ஹரீஷிடம் ரெண்டு வார்த்தை பேசேன் . அழறான்." என்றார்.

ஜனனியின் குரல் ஒலித்தது. " அம்மா, காலம்பற பாட்டி கொடுத்த பிஸ்கட்டை ஹரீஷ் ரெண்டா உடை ச்சு எனக்கு பாதி கொடுத்து சாப்பிட்டே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சான்மா, சரின்னு நானும் சாப்பிட்டேன். இப்போ ஸ்கூல் கிளம்பும்போது  திடீர்னு நான் கொடுத்த பிஸ்கட்டை திருப்பித்தான்னு அழறான்.  பாட்டியும் வேற முழு பிஸ்கட்  கொடுத்தா. நானும் என்னோட புது பென்சில் பாக்ஸ் கூட அவனுக்கு தரேன்னு சொன்னேன்.எதுவும் வேண்டாம். நான் சாப்பிட்ட பிஸ்கட்தான் திரும்ப வேணும்னு அழறான்மா " என்றது ஜனனி. எட்டு வயது தனக்குத் தெரிந்த வரையில் நான்கு வயதை சமாதானத்தைப் படுத்த முயன்றதை நினைத்து சிரித்த படியே ராகினி," ஜனனிக்குட்டி, நீ ரொம்ப சம்ர்த்துடா, மொபைலை அவன்கிட்டே கொடு ." என்றாள். 

பாட்டி," அம்மா எனக்கு இன்னும் காபி கொடுக்கலையே." என்றாள்.


ராகினி பாட்டிக்கு காபி டம்ளரை காண்பித்த போது, ஹரீஷின் அழுகுரல் கேட்டது.

" ஹரீஷ், அழுகையை நிறுத்தினா அம்மா உனக்கொரு surprise சொல்றேன் ."

அலறல் விசும்பலாகக் குறைந்தது.

" ஓடிப்போய் உன் கட்டில் அடியில் பாரு." என்றாள் ராகினி.

அரை நிமிட அமைதியும், அதன்பின், " ஹை , ஸ்பைடர்மேன் பேட், "என்ற கூவலும் கேட்டது. இதை யெல்லாம் எதிர்பார்த்துதான் ராகினி வீட்டில் அங்கங்கே சில ஆச்சர்யங்களை  ஒளி த்துவிட்டு வந்திருந்தாள்.

" கண்ணெல்லாம் சிவந்திருக்கே, ராத்திரி எதிலே பிரயாணம் பண்ணினே ?" என்றாள் பாட்டி.

" பஸ்சில்தான் பாட்டி " என்று ராகினி முடிக்கும் முன்னர் அம்மா அப்பாவைப் பிடித்துக் கொண்டாள்.

" நான் எத்தனை வாட்டி சொன்னேன் , வந்திருக்கிறது BP தான் , டாக்டரிடம் காண்பிச்சாச்சு ,மாத்திரையும் சாப்பிட ஆரம்பிச்சாச்சு. என்னவோ பத்மா ஸ்ரீ அவார்டு வாங்கின மாதிரி உடனே அவளுக்கு phone பண்ணி , கலவரப்படுத்தி, சின்னக் குழந்தைகளை விட்டு விட்டு வரவழைச்சு -- நான் சொல்லி யார் கேட்கிறா இங்கே ?" என்று ஒரு பாட்டம் பாடிவிட்டு உள்ளே போனாள். அப்பா செய்தித் தாளால் முகத்தை மறைத்துக் கொண்டார.

ராகினி சிரித்தபடியே பாட்டியிடம் திரும்ப, எப்போதும் குழந்தைகளிடம் ஆவலுடன் போனில் பேசும் பாட்டி, நடப்பது எதிலுமே சம்பந்தப் படாமல்," ராத்திரி ரயிலில்தானே வந்தே, தூங்கினாயா?" என்றாள். ரகு எட்டிப்பார்த்து, " அக்கா , all the best ." என்று சொல்லி விட்டுப் போனான்.ராகினி பாட்டியின் கவனத்தை திருப்ப எண்ணி " பாட்டி, தலை பின்னி விடறயா?" என்று சொன்ன படி சீப்பைக் கொடுத்து விட்டு வசதியாக உட்கார்ந்தாள்.

ராகினி சிறு பெண்ணாக இருக்கும்போது ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் பாட்டி அம்மாவை பூச் சந்தைக்கு அனுப்பி, நல்ல, பெரிய மல்லிகை மொக்குகளாக வாங்கி வரச் சொல்லி, தானே ராகினிக்கு தலை வாரி பின்னி வித விதமாக பூத்தைத்து விடுவாள்.இது நினைவுக்கு வர, பாட்டியிடம் சொல்ல எண்ணி ராகினி திரும்பியபோது ,பாட்டி தனது தலை முடியை இரண்டாக, மூன்றாக பிரிப்பதும், முறுக்குவதும், திரும்ப பிரிப்பதுமாக இருப்பதை உணர்ந்தாள். தலை முடியை விடிவித்துக் கொண்டு ," என்ன பாட்டி பண்றே?" என்றாள்.

பாட்டி கையில் சீப்புடன், முகத்தில் இயலாமை படர, கண்களில் பரிதாபம் நிரம்ப, " எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல்லை " என்றாள்.பாட்டியை அப்படிப் பார்த்த வுடன் ராகினிக்கு கண்ணில் நீர் முட்டி  விட்டது.  பாட்டியை அணைத்துக்கொண்டு " பரவாயில்லை பாட்டி, நான் சொல்லித்தரேன் " என்றபடி தலை முடியை முடிந்து கொண்டாள். " நீ கொஞ்சம் படுத்துக்கோ பாட்டி. நான் உனக்கு ஏதாவது வாசிக்கிறேன்." என்றாள். பாட்டிக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். ஒரு பக்கம் படிப்பதற்குள் பாட்டி தூங்கி விட்டிருந்தாள் .

வாசலில் பால் காரம்மா குரல் கேட்கவே எழுந்து வாசல்புறம் சென்றாள் ராகினி. இருவரும் நலம் விசாரித்துக் கொண்ட பின், பால்காரம்மா ராகினியிடம் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

" ராகினிக்கண்ணு, நீ பாட்டியை உங்க ஊருக்கு கூட்டிட்டுப்போய் பெரிய டாக்டர்கிட்டே காமிக்கலாமில்ல? நாப்பது வருஷமா நம்ம வூட்ல பால் ஊத்தறேன் போன வாரம் பாட்டிம்மா என்னைப் பார்த்து 'நீ யாருன்னு' கேட்டுப்பு ட்டாங்க. எனக்கு நெஞ்சே அடை ச் சுப்போச்சு.ஆனா இது கூட பரவாயில்லன்னு ஆயிடுச்சு அடுத்த  நாள் நடந்த விசயம். 

சாயந்திரம் பால் ஊத்தி முடிச்சிட்டு திரும்பி வந்துகிட்டு இருக்கேன்.நம்ம தெரு முனையிலே இருக்கிற பிள்ளையார் கோயில் வாசல்ல பாட்டி நின்னுகிட்டு இருந்தாங்க.'என்னம்மா , வூட்டுக்கு போவலயான்னு' கேட்டேன்.'எந்தப்பக்கம்னு வழி புரியலடி' ங்கிறாங்க.எனக்கு எப்படி இருந்துச்சுன்னு வார்த்தைல சொல்ல முடியலை.அப்படியே திரும்பி சாமிகிட்டே ஒரு சத்தம் போட்டேன்.வெயில், மழைன்னு பார்க்காம தெனந்தோறும் உன்னைப் பார்க்க வந்தவங்களுக்கு நல்ல பரிசா கொடுத்திருக்கேன்னு.  கையைப் புடிச்சு வீட்டுக்குக் கூட்டி வரேன், எதிரே உங்க அம்மா அரக்க பரக்க ஓடு வந்துக்கிட்டு இருக்காங்க, பாட்டி போய் நேரமாச்சே இன்னமும் காணலையேன்னு.அதிலேருந்துதான் அம்மா வாசல் கதவை பூட்டி வைக்கறாங்க. எனக்கு வரவர இங்கு வர்றதுக்கே சங்கடமா இருக்கு.என்ன சொல்றது போ." என்று ஓய்ந்தாள் 

அம்மா இது எல்லவற்றையும் முன்னரே ராகினியிடம் போனில் சொல்லியிருந்தாலும், ராகினி அவள் புலம்புவதை பொறுமையாகக் கேட்டாள்.அவளது வருத்தத்தை உணர முடிந்த வளாக " என்ன பண்றதும்மா? எல்லோருக்குமே பாட்டியை இப்படி பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கு.நீ சாமியிடம் வேண்டிக்கோ " என்று சொல்லியபடி எழுந்து பாட்டியின் அறைக்கு வந்தாள்.

அறையில் பாட்டியைக் காணவில்லை, ராகினிக்கு பகீரென்றது.

பாட்டி   (சென்ற இதழ் தொடர்ச்சி)

அறையில் பாட்டியைக் காணவில்லை. ராகினிககு  பகீரென்றது. அம்மா என்று  குரலேடுக்கு முன் பாட்டி குளியலறையிலிருந்து தலையில் துண்டுடன் வெளியே வந்தாள் .ராகினியிடம் , " இன்னிக்கு கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல இருக்கு. ரொம்ப   நாழியாச்சே, அம்மாவை தொந்தரவு பண்ண வேண்டாம்னுதான் நானே ஒரு  சொம்பு ஜலம் விட்டுண்டு வந்துட்டேன். மணி எழாயிருக்கும் போல இருக்கே, அம்மாவை காபி கொண்டு வரச் சொல்லு. இன்னும் குடிக்கலை."  .என்றாள். ராகினி ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பனிரெண்டு     மணி  வெயில் சுள்ளென்று அறைந்து கொண்டிருந்தது .வெயிலைப் பார்த்து மணி சொன்ன பாட்டியா இது என்று நினைத்த வாறே ," இப்பதானே பாட்டி, கொஞ்ச நேரம் முன்னாடி குளிச்சே? "என்றவாறு பாட்டியை  அமர வைத்து தலை துவட்டி விட ஆரம்பித்தாள்.

இவர்களின் பேச்சு சப்தம் கேட்டு உள்ளே வந்தாள் அம்மா. ராகினி விஷயத்தை சொன்னதுமே ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றவள் பூஜை அலமாரியில் தொங்க விட்டிருக்கும் சிறிய மணிகளில் நான்கை எடுத்துக்கொண்டு வந்தாள். அவற்றை மொத்தமாக ஒரு கயி ற்றில் கோர்த்து , குளியலறை தாழ்ப்பாளோடு சேர்த்துக் கட்டினாள் . " இனிமேல் இந்த கதவை திறந்தால்,மூடினால் சத்தம் கேட்கும் ராகினி .நான்  பார்த்துப்பேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் ஆளைக்கூப்பிட்டு,இந்த பாத்ரூம் உள் தாழ்ப்பாளை எடுக்கச் சொல்லி,   சமையல் உள் கதவுக்கு பூட்டு போடற மாதிரி வைக்கச் சொன்னேன். பாட்டி சின்ன குழந்தை மாதிரி ஆயிட்டாடி.  பகவான் எனக்கு தெம்பை கொடுத்தார்னா போதும். நான் பார்த்துப்பேன். உங்கப்பாவுக்கு மட்டும் தைர்யம் சொல்லு .பாட்டியிடம் பேசின்டிரு. நான் போய்  சாதம் பிசைஞ்சு எடுத்துண்டு வரேன்." என்று சொல்லியபடி உள்ளே போனாள்.

 அம்மாவைப்  பார்த்து ராகினிக்கு வியப்பாக இருந்தது. அப்பாவைப் போல, ரகுவைப்போல அம்மா புலம்ப வில்லை.  இதற்கென்றே தயார் ஆனவள் மாதிரி , இந்த கால கட்டமும் வாழ்க்கையின் ஒரு  அங்கம்தான் என்று ஒப்புக் கொண்டவள் மாதிரி, நடந்து கொண்டிருப்பதை எதிர் கொள்வதிலும், சமாளிப்பதிலும்,கவனம் செலுத்துபவளாக மாறி விட்டிருந்தாள். அம்மா தனது பூஜை புனஸ்காரங்கள்,  வெளிவாசல் போய் வருவது, ஒய்வு எல்லாவற்றையும்  குறைத்துக் கொண்டு பாட்டியை கவனித்துக் கொள்வதை ராகினி புரிந்து கொண்டாள் . அம்மாவின் உடல் நலம் பற்றிய கவலையும் ராகினிக்கு சேர்ந்து கொண்டது.

தினசரி இவர்கள் தொலை பேசியில் சொல்வதற்கும், நேரில் வந்து பார்ப்பதற்கும் இருந்த வித்தியாசமும், நிலைமையின் தீவிரமும் ராகினியை மிகுந்த துன்பத்துக்குள்ளாக்கியது. எப்படி தீர்வு என குழம்பிப் போனாள். ரகு சொன்னதின் உண்மை புரிந்தது. பாட்டி நேரம், காலம் வரையறைகள் அற்ற ஒரு உலகிற்குள்ளே எல்லாரையும் விட்டு விலகிச் செல்வது போல் இருந்தது. " கடவுளே, பாட்டியை என் இப்படி கஷ்டப் படுத்துகிறாய்? எல்லோரும் பாட்டியை வாழ்த்தியது எல்லாம் பொய்யாகி விட்டதா? எந்த புத்திசாலித் தனமும் ஞாபகமும் அவளுடைய பலங்களோ, அவற்றையே பலவீனமாக்கி விட்டாயே. எவ்வளவு கம்பீரமாக வளைய வந்தவளை, இப்படி எல்லாருமே பரிதாபப் படும் படி ஆக்கி விட்டாயே! தன்னைப்பற்றி இப்படி நினைக்கிறார்கள்  என்று புரிந்தாலே பாட்டியால் தாங்க முடியாதே! " என்று பலவாறாக எண்ணி புலம்பினாள்.

அம்மா கொண்டு வந்து வைத்த சாப்பாட்டை பாட்டி தானாகவே சாப்பிட்டாளே  தவிர, என்ன சாப்பிட்டோம் என்பது அவளுக்கு நினைவில்லை. ஆனால் ராகினிக்கு போளி பிடிக்கும் என்பதை மறக்காமல் அம்மாவிடம்,     "  நாளைக்காவது குழந்தைக்கு போளி  பண்ணிப் போடு" என்றாள்.  ராகினி பாட்டியிடம் பழைய கதைகள் கேட்டபோது,  பெரும் பாலும்  மறக்காமல் சொன்னாள். ராகினியின் இரு குழந்தைகளிடமும் பாட்டிக்கு கொள்ளை பிரியம். ஆனால், இது வரை அவளிடம் பாட்டி குழந்தைகளைப் பற்றி எதுவுமே கேட்க வில்லை. இப்போது அவர்களைப பார்த்தாலும், பெயர் நினைவிருக்குமோ என்று  ராகினிக்கு சந்தேகமாக இருந்தது.


மதிய உணவு முடிந்ததும், ராகினி பாட்டியிடமும், அம்மாவிடமும் பேசிக்கொண்டிருந்தாலேயொழிய, சிந்தனை முழுவதும்  என்ன செய்வது என்பதிலேயே இருந்தது. யாராவது அனுபவமுள்ள நர்ஸ் மாதிரி அமர்த்தலாமா என்றால், அப்பாவும், அம்மாவும் ஒத்துக் கொள்ள வில்லை. அம்மா," பாட்டிக்கு என்ன உடம்புக்கு? படுத்த படுக்கையாகவா இருக்கிறார்? மருத்துவ உதவி என்று தேவைப் படாத வரையிலும் யாரும் வேண்டாம்." என்று தீவிரமாக மறுத்தாள். ராகினிக்கு போன முறை மருத்துவரை சந்திக்க சென்ற போது, அறிமுகமான குமரேசன் என்பவரின் ஞாபகம் வந்தது. குமரேசன் தனது 90 வயது தந்தையுடன் வந்திருந்தார். அவருக்கு சீப்பு, தலையணை,சாவி போன்ற பொருள்களின் பெயர்கள் கூட மறந்து போய் விட்டது. எந்தப் பொருளை எப்படி, எதற்கு உபயோகிக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்தமாக நினைவில்லை. மற்றபடி ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சொன்ன போது, அந்த சமயத்தில் ராகினிக்கு அது ஒரு செய்தி மாதிரிதான் இருந்தது. ஆனால் இப்போது பாட்டிக்கு அது மாதிரியெல்லாம் ஆகி விடக் கூடாது என்று ராகினி பயந்தாள்.

எப்படி  இருந்தாலும், போகப்போக சிரமம்தான்.  நாம்தான் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருந்து கொள்ள  வேண்டும். இன்னும் ஒன்றரை மாதம் போய் விட்டால், பரீட்சை முடிந்த கையோடு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோடை விடுமுறை இரண்டு மாதங்களும் இங்கு வந்து  விடலாம். குழந்தைகள் அப்பா அம்மா வுக்கு ஒரு மாறுதலாக இருப்பார்கள். தான் பாட்டியை முழுவதும் கவனித்துக் கொள்ளலாம். ஊருக்கு கிளம்பும் முன் தனது திருப்திக்காகவாவது பாட்டியை ஒரு முறை மருத்துவரிடம் காண்பித்து விட வேண்டும். அம்மாவுக்கும் ஒரு முழு பரிசோதனை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.


மதியம் 3 மணி சுமாருக்கு பாட்டி தூங்கிய பின்னர், ராகினி தோட்டத்துக்கு வந்தாள். அவர்கள் வீட்டில் நாற்பது வருடங்களாக வேலை செய்யும் லட்சுமி  அப்போது தான் உள்ளே நுழைந்தாள். ராகினி, ரகு இருவரையும் தூக்கி வளர்த்தவள். பாட்டியிடம் மிகுந்த அன்பும், மரியாதையும், உரிமையும் உள்ளவள். மொத்தத்தில் ரேஷன் கார்டில்  பெயர் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினராகவே ஆகி விட்டவள்.
ராகினியைப் பார்த்தவுடன் ஓடி வந்து அவள் கன்னத்தை தடவி, நெட்டி முறித்த படியே , " என்ன ராகினிக்கண்ணு, நல்லாருக்கியா? ஊர்லே மாப்பிள்ளை , குழந்தைங்க எல்லாரும் சுகமா? " என்று கேட்டவள் " அம்மா சொன்னாங்க நீ வரப்போறேன்னு. நான் ஒரு நாள் வெளி யூர் போயிட்டு  நேரே இங்கதான் வாரேன். " என்ற படியே பலா மரத்தின் அடியில் போட்டிருந்த பெரிய கல்லின் மீது அமர்ந்து கொண்டாள்.

" எல்லாரும் நல்லாயிருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க லட்சுமியம்மா?" என்று கேட்ட வாறே ராகினியும் மாமரத்தில் கட்டியிருந்த மரப்பலகை ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.

" தைரியமா உட்காரு. அக்கம்பக்கத்து பிள்ளைங்க விளையாடுதேன்னு போன வாரம்தான் உங்கப்பா கயித்தை மாத்தினாங்க" என்று சிரித்தாள் லட்சுமி.

பழக்க தோஷத்தில் கால்கள் மெல்ல தரையை உந்த, ஊஞ்சல் முன்னும் பின்னுமாக ராகினியை தாலாட்டியது. ஒரு நிமிடம் அப்படியே தனது குழந்தைப் பருவத்தை எட்டியவளை லட்சுமியின் குரல் கலைத்தது.

" பாட்டியைப் பார்த்தியா? சின்னக் குழந்தை கணக்கா ஆயிட்டாங்க. வயசானவங்க என்ன வியாதியை வேண்டியா வரவழிச்சுக்கிறோம்? அதுவா வருது. வயசானதுக்கு ஏதாவது அறிகுறி வேணுமில்ல.பாட்டிக்கு வைரம் பாய்ஞ்ச உடம்பு. அதனால்தான்  மனசைப் போட்டு குழப்புது போல இருக்கு. நீ ரொம்ப வருத்தப்படறேன்னா ங்க அம்மா. நீ எதுக்கும்  கவலைப் படாதே கண்ணு. அம்மாவும், நானும் தைரியமா இருக்கோம். பாட்டியைப் பார்த்துக்கறோம் .வீட்டில் ஒரு கைக் குழந்தை இருந்தால் கட்டோட கட்டா  கவனிச்சுக் கிறதில்லை?அது மாதிரிதான். என்ன ஒண்ணு சின்னபுள்ளை ன்னா நாளாக நாளாக முன்னேற்றம் இருக்கும். வயசானவங்க கிட்டே அது இருக்காது. சின்ன  புள்ளைங்க பண்றதை ரசிக்கிற மாதிரி இவங்க பண்றதையும் ரசிச்சு, சிரிக்க வேண்டியது தான். இல்லைன்னா உங்கப்பா மாதிரி புது  வியாதி வந்து சேரும். முந்தா நாள் பாரு, அரை மணிக்குள்ளே அஞ்சு தடவை அவங்க ரூமை பெருக்கியிருக்கேன்.  ஆனாலும் இன்னும் பெருக்கலைன்னே சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு அளவுக்கு மேலே நாமலே  மெல்ல அவங்க கவனத்தை திருப்பிட வேண்டியதுதான். பாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும்னு அம்மாதான் சொல்லிக் குடுத்தாங்க .

" நீ எதுவும் வருத்தப்படாதே .குழந்தைகளுக்கு என்ன பலகாரம் பிடிக்கும்னு அம்மாகிட்டே சொல்லு.நான் மாவு அரைச்சு கொண்டாந்து தரேன். அம்மா செய்து தரத்தை எடுத்துகிட்டு சந்தோஷமா ஊருக்கு கிளம்பு. பாட்டிக்கு செய்ய கடமைப்பட்டவங்க நிறைய பேர் இங்கே தயாரா இருக்கோம். அம்மாதான் தேவைப்படும்போது சொல்றேன்னு மறுத்துக்கிட்டு இருக்காங்க.உங்கப்பாவுக்கு சிரமமில்லாமல் எல்லோரும் பார்த்துக்குவோம். வந்த நீ சந்தோஷமா இருந்துட்டு கெளம்பு." என்று முடித்தாள்.அப்போது அங்கு வந்த அம்மா ராகினியின் தலையை ஆதுரமாகத் தடவ,  ராகினி கண்ணில் நீருடன் அம்மா, லட்சுமி இருவர் கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள்.

 நடை முறையில் எப்படி இருந்தாலும், முன்பு அம்மா  சொன்னதும், இப்போது லட்சுமி சொன்ன விதமும், முறையும் ராகினிக்கு  மிகுந்த தெம்பை அளித்ததுடன் எவ்வளவு பெரிய பிரச்சினையை இவர்கள் எவ்வளவு சுலபமாக அணுகுகிறார்கள் என்ற வியப்பையும் அளித்தது.இதையும் பாட்டியிடமிருந்துதான் கற்றிருப் பார்களோ என்று எண்ணினாள். கொஞ்சம் மனக்கலக்கம் குறைந்தவளாக அன்றைய பொழுதைக் கழித்து விட்டு இரவு பாட்டியோடேயே படுத்துக் கொண்டாள்.

இரவு மணி  ஒன்று இருக்கும்.ராகினி சட்டென்று கண் விழித்த போது பாட்டி படுக்கையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தாள். " என்ன வேணும் பாட்டி?" என்றதற்கு பாட்டி ஒன்றும் பேச வில்லை. அமைதியாக கண் மூடியபடியே அமர்ந்திருந்தாள். திடீரென " ராகினி, நம்ம ரகுவை வேஷ்டி சட்டையில் கண்ணாடி இல்லாமல் நினைச்சுப் பார். உன் தாத்தா 22 வயசில அப்படியேதான் இருப்பார். தாத்தாவின் மறு பிரதிதான் ரகு." என்றாள்  

ராகினிக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் பாட்டி இதுவரை யாரிடமும், ஏன் அப்பாவிட ம் கூட தாத்தாவைப் பற்றி பேசியதே இல்லை. இப்போது என்ன திடீரென?  " ராகினி ,தூங்கறயா குழந்தை ? " என்றாள் பாட்டி. " இல்லை பாட்டி நீ சொல்லு." 

பாட்டியின் குரல் நிசப்தமான இருளில் கணீரென ஒலித்தது.

" என் பதினஞ்சு வயதிலே கல்யாணமாகி வந்தபோது நான் பிரமிச்ச முதல் விஷயம் உன் தாத்தாவின் ரூம் முழுக்க இருந்த  மர அ லமாரிகளும், அதிலே இருந்த புஸ்தகங்களும்தான்.ஆச்சர்மாய் பார்த்துண்டே நின்னேன். " என்ன பார்க்கறே நீ " ன்னு  கேட்டார் அவர். இதெல்லாம் நீங்க வாசிச்சதான்னேன்.

" படிச்சது, படிச்சிண்டு இருக்கிறது, படிக்க வேண்டியது எல்லாமே இருக்கு"ன்னவர் , "நீ வாசிப்பயா "ன்னு கேட்டார்.

"வாசிக்கத் தெரியும். ஆனால்  " என்ன புஸ்தகம் வேணும்" னு கேட்டார். " நீங்க எது கொடுத்தாலும்  வாசிக்கிறேன் னேன். பேர் ஞாபகமில்லை. ஆனா நம்ம தேசம் எவ்வளவு உ சத்திங்கிறதைப் பத்தி ஒரு புஸ்தகம் தந்தார். மூன்று நாளில் வாசிச்சு முடிச்சேன்  அதக்கப்பறம் அவர் எடுத்துக் குடுக்க,  நிறைய வாசிச்சேன்."

பாட்டியின்  குரல் கேட்டு அம்மா அப்பா, ரகு மூவரும் வந்து தனக்கு பின்னால் உட்காருவதை உணர்ந்தாள் ராகினி. பாட்டி பேசிக்கொண்டே போனாள்.

" ரொம்ப அற்புதமான மனுஷர் அவர். பெரிய பரோபகாரி. ஒருத்தருக்கு ஒரு உதவி தேவைப் படறதுன்னு தெரிஞ்சுதுன்னா    கேட்காமலேயே வலியப்போய் செய்வார் . அவரை விட வயசில் பெரியவாளோட எல்லாம் மணிக்கணக்காக விவாதிப்பார். அவர் போகிற எல்லா இடங்களுக்கும் பெருமளவில் என்னையும்.கூட்டிண்டு போவார். அந்தக் காலத்திலே அது ரொம்ப அதிசயம்.  யார் பரிகாசம் செய்தாலும்  கவலைப் பட மாட்டார். எனக்குத் தெரிஞ்ச உலகத்தை அவளுக்கும் காண்பிக்கிறேன். அவளால் இன்னும் நான்கு பேருக்கு பலன் இருக்குமில்லையா?' என்பார். நம்மைச் சுற்றி இருக்கிறவா நன்றாக இருந்தால்தான், நாமும் சுபிட்சத்தை அனுபவிக்க முடியும்'-னு  சொல்வார்.  அதுவே அவருடைய லட்சியமாகவும் இருந்தது.சக மனுஷர்களை எப்படி புரிஞ்சுக்கணும், எப்படி  பழகணும் கிறதெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

மொத்தத்தில் அவர் எனக்கு தன்  அறிவையும், அனுபவத்தையும் நான் அவருக்கு அபரிமிதமான அன்பையும் பரி மாறிண்டோம்.  ஒன்பது வருஷம் ஓடினது தெரியலை." பாட்டி நிறுத்தினாள். சிறிது மூச்சு வாங்கியது. கண்ணை மூடிக்கொண்டாள். ராகினி பாட்டியின் கையைப் பற்றிக்கொண்டாள்.

ஏதோ விஷக் காய்ச்சல்னு ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தவரை மூணாம் நாள் நாலுபேரா கொண்டு வந்து  கூடத்திலே கிடத்தினா . முதல்ல எனக்கு ஒண்ணுமே புரியல்லை. என் அம்மாவும், மாமியாரும் அழுவதைப் பார்த்து நானும் அழுதேன். கொஞ்ச நேரம்தான். அவர் பக்கத்திலே உட்கார்ந்து, அவர் முகத்தைப் பார்க்க, பார்க்க எனக்கு ஏதோ ஆகிற மாதிரி இருந்தது. அவர் உசுரோ , ஆத்மாவோ எதுவோ அப்படியே எனக்குள்ள வந்து நிறஞ்சுட்ட மாதிரி இருந்தது. இத்தனை நாளா எனக்குப் பக்கத்திலேயே இருந்த தெம்பும், பலமும் எனக்குள்ளேயே புகுந்துட்ட மாதிரி இருந்தது. அவரோட  ஸ்தூலத்தை விட்டுட்டு   எனக்குள்ளேயே, என்னோடவே வாழப்போறார்னு புரிஞ்சது.இதை நான் சொன்னப்போ எல்லாரும் பயந்துட்டா. எனக்கு சித்தபிரமைன்னு பேச ஆரம்பிச்சா. சரி, இவர்களிடம் பேசிப்புண்ணியமில்லை,   வாழ்ந்து   காண்பிக்கணும்னு  தீர்மானம் பண்ணிண்டேன்.

அவரோட ஆசை எதுவா இருந்ததோ, அதையே எனக்கு வாழறதுக்கு லட்சியமா வச்சுண்டேன். அவர் தேச 
க்ஷேமம் பற்றி யோசிச்சார். நான் என்னைச் சுத்தி இருக்கிறவாளோட க்ஷேமமே என்னோட வாழ்க்கைக்கு அர்த்தமாப்  பண்ணிண்டேன்.முடிஞ்ச வரையிலும் அப்படித்தான் இருந்திருக்கேன்கிற திருப்தி இருக்கு. எப்படி இல்லாம போகும்? உன் தாத்தாதான் என் கூடவே ஒவ்வொரு இடத்திலேயும் எனக்கு வழி காண்பிச்சிண்டு இருக்காரே. அதனாலேதான் தாத்தாவைப்பத்திச் சொல்லுங்கோன்னு யார் கேட்டாலும் எனக்கு சொல்ல முடியாது. அது என்னைப் பத்தி நானே சொல்லிக்கிற மாதிரி. அவர்  வேறு நான் வெறே இல்லை."

பாட்டி நிறுத்தினாள். முகம் இரவு விடி விளக்கில் கூட மிகவும்  பிரகாசமாகவும், தெளிவாகவும்  இருந்தது .பாட்டி படுக்கையில் படுத்து கண்ணை மூடிக்கொண்டாள். ராகினி  பாட்டியின் கையை விடவில்லை. மெல்லத் திரும்பிப் பார்த்த போது, அம்மாவும், அப்பாவும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. 

ராகினி வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல உணர்ந்தாள். பாட்டி இவ்வளவு நாள் இவளுக்கு தெரிந்த பாட்டியாக இல்லாமல் , உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாத, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், வாழ்க்கைக்கு தானாகவே அர்த்தம் செய்து கொண்ட  ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகத் தோன்றினாள்.  என்ன  ஒரு வைராக்கியம், எப்படிப்பட்ட சிந்தனை,எவ்வளவு கட்டுப்பாடு என்று எண்ணி எண்ணி  மாய்ந்து போனாள். வாழும் கலையை பாட்டி வாழ்ந்தே காண்பித்திருக்கிறாள் என்று நினைக்க நினைக்க ராகினிக்கு பாட்டியின் மேல் இன்னும் பிரியமும், மரியாதையும் கூடுவது போல் இருந்தது. ஒரு பெரிய பொக்கிஷம் தன்னிடம் இருப்பதாக எண்ணினாள். நெடுநேரம் கழித்து அசந்து போய் கண்ணயர்ந்தாள்.

சூரியன் ஜன்னல் வழியாக காலையில் எழுப்பிய போது மணி ஏழரை ஆகியிருந்தது. பாட்டி இன்னமும் எழுந்திருக்க வில்லை.அப்பாவும்,ரகுவும் அப்படியே உட்கார்ந்த இடத்திலேயே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவரையும் எழுப்பாமல், ராகினி, எழுந்து சென்று முகம் அலம்பி, காபியை எடுத்துக்கொண்டு வந்து பாட்டியை எழுப்பினாள்.

 பாட்டி திருப்தியான முகத்துடன் , சலனமின்றி, மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தாள்.





Anuradha

1 comment:

  1. Excellent Narration. Great future to the author. Eligible for magazines

    ReplyDelete