Sunday, December 8, 2013

Kavithai

உலகம் உய்வித்து ஓர் பொம்மையென அதை பாவித்து 
பலகாலம் நீ விளையாடும் இடமென அடக்கி வைத்தனையோ 
நிலமும் நீரும் காற்றும் கடலும் காரணமாய் படைத்தனயோ 
கலையாத பொக்கிஷமாய் நீ இருந்து அதனுள் ஆட்டிவைத்து 
விலைமதியா மாணிக்கமாய் நிலையான ஜோதியாய் நித்தமும் 
அலைகடலின் ஆரவாரமாய் ஆதவனின் தோற்றமாய் 
மாலை மதியின் ஒளியாய் மந்தாரம் வீசிடவே அந்த 
பாலையிலும் ஓர் ஊற்றாய் அமைந்தனயோ பாவி நான் 
சிலையாய் நீ இருந்தாய் என நினைந்து நினைந்து மாய 
வலையில் வீழ்ந்தேனே அறியாமையால் - மாயவ தூயவா 
நிலையான வாழ்க்கையே நீ தந்து என்முன் வந்து 
சலியாத மனம் தந்து உன்னையே சரண் அடைய அருள்வாயே !

அண்ட  சராசரமெல்லாம் ஆளும் அரசியே காஞ்சி காமாட்சியே 
கண்டவர் விண்டதில்லை உன்னையே மகாமாயியே 
விண்ணவர் வணங்கும் வேதப்பொருளே உலக ஞானபிழம்பே 
கின்னரர் வானவர் அடிபணியும் அன்பின் வித்தே 
காருண்ய ரூபிணியே மதுரை வாழ் மீனாட்சியே உன் 
சீர் பாடும் தருணமதை தந்திடுவாய் தயை புரிந்திடுவாய் 


அலை பாயும் நெஞ்சமம்மா ஆறுதல் சொல்ல யாருமில்லை 
நிலையான வாழ்வோ இல்லை மனமோ நிலையில்லை
மலை போல் குவிந்ததம்மா தாளாத துக்கமெல்லாம் 
சிலைபோல் நின்றனயோ செதுக்கிவைத்த பதுமையோ 
விலையில்லா மாணிக்கமே தயை காட்டாயோ 
பலநாளும் உனையே மனதார நான் துதித்திடவே - மாய 
வல்யினில் நான் வீழாது காத்திடுவாய் அன்னையே என்னையே

----

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்கையாடா  இது 
இறைவன் அளித்த மாறா இலக்கணமடா 
குறையோ நிறையோ அது அவன் வகுத்ததடா 
சரியோ தவறோ அது அவன் நினைத்தடா
கவலையில் பிறந்தோமே கலைகள்தான் கற்றோமே 
நிலையிலா வாழ்க்கையிலே நித்தம் தவழ்ந்தோமே 
பல நாமும் கற்றோமென செறுக்குடனே இருக்கின்றோம் 
சில நாளில் மரணம் நம்மை சூழுமென நினைந்தோமா
அலைகடல் ஆரவாரம் செய்கின்றதே ஆணவமோ 
மலைபோல் துன்பங்கள் வருகின்றதே அது விதிதானோ 
நிலையாய் நாம் இல்லையே அதுவே அறிவீலித்தனமொ 
உலகை படைத்தனனே பதில்தான் கூறாயோ
நிலம் நீர் இல்லையேல் உலகே இல்லை 
பலம் நீயே ஆண்டவா இதை யார் உணர்வார் 
சலனம் நீ மூலமும் நீ முதல்வனே நீ 
உலகமே நீயன்றோ உத்தமா அதனை காத்திடுவாய்
நெஞ்சத்தில் உறைந்தது உனது நாமம் - நீயே 
தஞ்சமேனக்கொண்டேன் தரணியில் நானே 
கெஞ்சுகின்றேன் என்னிடம் வாராயோ
கொஞ்சும் மொழி பேசாயோ கூடவே இருப்பாயோ



R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

No comments:

Post a Comment