Sunday, January 22, 2012

கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள்

சொல்வனம்

.: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.



(திருவிடைமருதூரில் வாழ்ந்து இறந்தவர்களின் பெருமைகளை பேசி பறை சாற்றும் நாம், ஜீவனதிர்க்கே கஷ்டப்படும் இந்த கலைஞர்களுக்கு என்ன செய்ய போகிறோம் ? -உங்கள் கருத்து என்ன ? -TDR Times) 
 
 
சார்!
நாங்கள் அவர் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே ஒரு அனக்கம் இல்லை.
சார்!
மறுபடியும் கூப்பிட்டோம்.
பதில் இல்லை.
முன் கதவை இலேசாகத் தள்ளி உள்ளே உற்றுப் பார்த்தோம்.
ஒரு கிழிந்த பாயில், கிழித்துப் போடப்பட்ட பாயாக ஒரு பெண் படுத்திருந்தாள். அவர் பக்கத்தில் ஒரு மண் சட்டியில் இருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. கொசுவை விரட்டுவதற்காக எதையோ எரிய விட்டிருக்கிறார்கள். அந்தப் பெண் தலையை இலேசாகத் தூக்கினாள். அதற்கு மேல் தூக்கமுடியவில்லை. மீண்டும் படுத்துக் கொண்டாள். மனமும் உடலும் சரியில்லாத நோயாளி என்பது முதல் பார்வையிலேயே தெரிந்து விட்டது.
உடன் வந்த நண்பர்கள், நாகசுரம் இஞ்சிக்குடி சுப்பிரமணியமும், புகைப்பட கலைஞர் ஸ்ரீநாத்தும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.
“தவறுதலாக தீச்சட்டி அந்தப் பெண் மேலே விழுந்து விடப் போகிறது. யாரையாவது கூப்பிடலாம்” என்றார்கள்.
எங்கள் சத்தத்தைத் கேட்டு வீட்டின் பின்புறம் இருந்து ஒரு பெண்ணும் அவருடைய கணவரும் வந்தார்கள்,
உள்ளே பெரியவர் இருக்கிறாரா என்று கேட்டோம். அவர்கள் உள்ளே போய் ஒரு வயதான மனிதரை அழைத்து வந்தார்கள். ஊதினால் பறந்து விடுவார் என்பது போன்ற தோற்றம். ஒன்றுக்கு இரண்டாக சட்டை அணிந்திருந்தார். துவைத்து பல நாட்கள் இருக்கும். காது கேட்காது என்பதற்கு அடையாளமாக காது கேட்கும் கருவி அணிந்திருந்தார்.
[ராமச்சந்திர ராவ்]
“உங்களுக்கு கோட்டுவாத்தியம் சகாராமராவைத் தெரியுமா?” என்று ஊருக்கேக் கேட்குமாறு கத்திக் கேட்டேன்,
சட்டென முகத்தில் புன்னகை மலர்ந்தது. கூடவே எங்கிருந்தோ பலமும் அவர் உடலில் சேர்ந்து கொண்டது போல் நிமிர்ந்து நின்றார்.
“அவர் என்னோட பெரிய தகப்பனார். நான் அவரோட தம்பி ஹரிராவ் புள்ள.”
எண்பத்தைந்து ஆண்டுகளில் முதல் முறையாக தன்னுடைய குடும்பத்தினரின் இசைப் பங்களிப்பைத் தெரிந்து கொண்டு யாரோ வந்திருப்பதில் அவருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
photo-3
[சித்ரவீணையுடன் சகாராமராவ்]
மறைந்த செம்மங்குடி சீனிவாசய்யரின் குருவான சகாராமராவ் திருவிடைமருதூர்க்காரர். செம்மங்குடியின் பேச்சில் எப்போதுமே சகாராமராவைப் பற்றி ஒரு செய்தி இருக்கும். அந்த சகாராமராவ் வாழ்ந்த திருவிடைமருதூரையும், அவர் குடும்பத்தினரையும் பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆனால் அவர்களைத் தேடிப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை.
மன்னார்குடிக்கு மதில் அழகு, திருவாருர் தேர் அழகு என்றால், திருவிடைமருதூருக்கு தெரு அழகு. இன்றும் அந்த அகண்ட தெருக்கள் அழகு குறையாமல்தான் இருக்கின்றன. மாராட்டியர் காலத்து அரண்மனை ஒன்று சிதிலமடைந்து, செடிகளும் மரங்களும் முளைத்துக் கிடக்கிறது. நெருங்கி பார்த்தால், அதன் பேரழகு புலப்படுகிறது. கால வெள்ளம் அதை அடித்து ஒரமாய்ப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது.
ஒரு காலத்தில் மகாலிங்கசுவாமி கோவில் விழாக்களின்போது அந்தத் தெருக்களில் இசை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. கொட்டும் பனியில், தலையில் மப்ளரைப் போட்டுக் கொண்டு விடிய விடிய நாகசுர கச்சேரிகளைக் கேட்ட ஆனந்தத்தை செம்மங்குடி விவரிக்கும்போது, நாமும் அங்கே நின்று அதை கேட்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
“அவாளையெல்லாம் கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,” என்று செம்மங்குடி கூறுவார்.
இன்று அந்த தெருக்களில் ஒரு வெறுமை மட்டுமே நம்மை சூழ்ந்து கொள்கிறது. அந்தத் தெருக்களில் நின்று வருவோர் போவோரிடம் எல்லாம் சகாராமராவைத் தெரியுமா, சகாராமராவைத் தெரியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தோம். 1900-களின் தொடக்கத்தில் கர்நாடக இசை உலகில் கோலோச்சியவர்களில் சகாராமராவும் ஒருவர். 1930-களில் காலமாகி விட்ட அந்த கோட்டுவாத்தியக் கலைஞரை இன்று அவர் ஊரில் யாருக்கும் தெரியவில்லை.
மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது அங்கு பல இசைக்கலைஞர்கள் குடிபெயர்ந்தனர். அவர்களில் சகாராமராவின் குடும்பமும் ஒன்று. வீணை போல் இருக்கும் கோட்டுவாத்தியத்தை அவர் வாசித்து வந்தார். “பண்டைகாலத்தில் அதன் பெயர் சித்ரவீணை என்றுதான் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் சகாராமராவ் அதை கோட்டு வாத்தியம் என்று அழைத்தார்,” என்கிறார் சித்ரவீணை கலைஞர் ரவிகிரண்.
அந்த வாத்தியத்தில் பல மாற்றங்களை செய்து வாசித்து வருகிறார் ரவிகிரண். அவருடைய தாத்தா நாராயண ஐயங்கார் சகாராமராவின் முக்கியமான சீடர். அந்த வாத்தியம் இத்தனை பிரபலம் அடைந்ததற்குக் காரணம் நாராயண ஐயங்கார்தான். ஒரு கையால் மீட்டிக் கொண்டு, மற்றொரு கையில் வைத்திருக்கும் சிறு கட்டையால் தந்திகளை அழுத்தி வாசிப்பார்கள். எருமைக் கொம்பால் இந்த கட்டை செய்யப்பட்டிருந்தது. இப்போது டெப்லான் என்று அழைக்கப்படும் சிந்தடிக் கட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.
சகாராமராவின் குடும்பத்தினர் குறித்தத் தகவலை மற்றவர்களால் தரமுடியாத நிலையில், அந்த ஊருக்கு இசையுலகில் பெரும்பெயரை வாங்கித் தந்த நாகசுரம் வீருசாமி பிள்ளைக்குத் தாளம் போட்ட சி. கணேசனை அணுகினோம். வீருசாமி பிள்ளைக்கு 22 ஆண்டுகள் அவர் தாளம் போட்டிருக்கிறார். மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற மூன்று நாகசுர கலைஞர்களில் வீருசாமிபிள்ளையும் ஒருவர்.
கணேசன் வீட்டுக்குப் போய் விசாரித்தபோது, அந்த ஊரில் வயலின் வாசிக்கும் ஒரு வயதான பெரியவரைக் கேட்டால் சகாராமராவைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றார். சொல்லப்போனால் கணேசனே சகாராமராவைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நமக்காக தனக்கு வேண்டிய ஒருவரை விட்டு, மகாதான தெருவில் வசித்து வந்த அந்த வயதான வயலின் வித்வான் குறித்து அறிந்து வருமாறு அனுப்பினார். தேடிப் போனவர் சற்று நேரத்தில் திரும்பி வந்தார். அந்தப் பெரியவர் வீட்டை விற்று விட்டு வேறு எங்கோ போய் விட்டதாகக் கூறினார்.
“இங்கே இப்போ யாரும் இல்லை தம்பி. கோயிலில் நாகசுரம் வாசிக்க இரண்டு பேர் இருக்காங்க. மற்றபடி சங்கீகத்தைத் தேடிப் போனாலும் கேட்க முடியாது. ஒரு காலத்திலே இந்த ஊருல வந்து பாடாதவங்க யாரு இருந்தாங்க, நாகசுரம் வாசிக்காதவங்க யாரு இருந்தாங்க,” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் கணேசன்.
குடும்ப வறுமையின் காரணமாக தன்னுடைய ஒன்பதாவது வயதில் வீருசாமி பிள்ளையிடம் தாளம் போடுவதற்காக வந்து சேர்ந்தார் கணேசன். அன்றிலிருந்து 22 ஆண்டுகள் அவரோடே இருந்தார். 13 வயதில் வீருசாமி பிள்ளையுடன் இலங்கை செல்வதற்காக அவர் பெற்ற பாஸ்போர்ட்டை எடுத்து நமக்காகக் காட்டினார்.
“நான் போகாத ஊர் இல்லை. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். ஒரு மாதம் இரண்டு மாதம் தொடர்ந்து கச்சேரி இருக்கும். வீட்டுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் வருவோம். ஒரு தலைமுறைக்கு ஒரு தாளம் (ஜால்ரா) போதுமானது. ஆனால் நான் ஏழு தாளங்களை உடைத்திருக்கிறேன். அப்படினா எவ்வளவு கச்சேரி இருந்திருக்குமுண்ணு யூகிச்சுக்குங்க,” என்று கூறிக் கொண்டே தன் வீட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வீருசாமி பிள்ளையின் படத்தை உற்றுப் பார்த்தார் கணேசன்.
கண்ணாடி உடைந்து, சிலந்தி வலை சூழ இருந்த புகைப்படத்தில் கையில் பாரி நாயனத்துடன் கம்பீரமாக நம்மைப் பார்க்கிறார் வீருசாமி பிள்ளை.
“அவர் கணக்கில்லாம சம்பாதிச்சாரு. இந்த ஊருல எட்டுக்கட்டு வீடு அவர் வைத்திருந்தார். ஆனால் அவர் காலத்துக்குப் பிறகு பல கை மாறி விட்டது. கடைசியில் வீட்டை வாங்கியவர்கள் அதை டாஸ்மாக் சாராயக்கடை நடத்துவதற்கு வாடகைக்கு விட்ட போதுதான் என் மனம் உடைஞ்சு போச்சுங்க,” என்று கூறிக் கொண்டே தன்னுடைய இடதுகை பெருவிரலால் படத்தில் இருந்த சிலந்தி வலையைத் துடைத்தார்.
photo-12
[வீருசாமி பிள்ளையின் படத்துடன் கணேசன்]
கணேசனுக்கு இடதுகையில் பெருவிரல் மட்டும்தான் இருக்கிறது.
“இந்த ஊரில் ஒரு நாயுடு ரைஸ் மில் வைத்திருந்தார். அரையணாவுக்கு நெல் அரைத்துத் தருவார். கூலி அதிகமாக இருக்கிறது என்று எல்லோரும் வீருசாமி பிள்ளையிடம் கூறினார்கள். நாயுடு அவருக்கு நண்பர். காலணாவுக்கு அரைத்துத் தருமாறு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டார். நீரு ஒரு மில் வைச்சு காலணாவுக்கு அரைத்துக் கொடும் என்றார் நாயுடு. உடனே மில் வைத்து விட்டார் வீருசாமி பிள்ளை,” என்று பழைய கதையை நினைவுகூர்ந்தார்.
அந்த மில்லின் எந்திரத்தில் கை மாட்டிக் கொண்டுதான் கணேசனின் நான்கு விரல்களும் துண்டாகி விட்டன. தற்போது அந்த ஒரு விரலால் தவில் வாசித்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார் கணேசன்.
கணேசனிடம் விடைபெற்றுக் கொண்டுதான் சகாராமராவின் குடும்பத்தைத் தேடி அலைந்தோம். யாருக்கும் தெரியவில்லை. நமக்காக ஒருவர் திருச்சியில் இருக்கும் தன்னுடைய அக்காவை தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டார். அவருடைய அக்கா திருவையாறு இசைக் கல்லூரி தொடங்கிய போது பயின்ற முதல் மாணவியரில் ஒருவர். அவருக்கு சகாராமராவைத் தெரிந்திருக்கலாம் என்று அவர் விசாரித்தார். அவருக்கும் தெரியவில்லை. திருக்கோடிகாவலுக்குப் போய் விசாரிக்கலாம் என்று புறப்பட்டபோதுதான், திருவிடைமருதூரில் உள்ள பன்னிரண்டு அக்கிரஹாரத்திலும் விசாரித்தோம். அங்கும் இல்லை. கடைசியாக தெற்கு எடத் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் ராமச்சந்திரராவைக் கண்டுபிடித்து விசாரிக்கத் தொடங்கினோம்.
“எங்க அப்பா வயலின் வாசிப்பார். நானும் வயலின் வாசிப்பேன்,” என்று கூறி விட்டு, சட்டென வீட்டுக்குள் புகுந்து ஒரு புகைப்படத்துடன் வந்தார் ராமச்சந்திரராவ்.
photo-7
“இந்த படத்தில் கோட்டுவாத்தியத்துடன் இருப்பது சகாராமராவின் புள்ள சீனிவாசராவ். கூட வயலினை வைத்துக் கொண்டிருப்பவர் என் தகப்பனார்,” என்றார் அவர். [மேலே உள்ள படம்].
“நான் முதலில் திருவாலங்காடு சுந்தரேச ஐயரிடம் வயலின் கற்றுக் கொண்டேன். பின்னர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் பாடம் தொடர்ந்தது,” என்று கூறிக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்.
photo-4
இப்போது கையில் இன்னொரு புகைப்படம். அதில் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையுடன் இவர் இரண்டாவது வயலின் வாசித்துக் கொண்டிருக்கும் புகைப்படம். அந்தப் படத்திலேயே ராமச்சந்திரராவின் தகப்பனார் ஹரிராவ், ருத்திராட்சம் அணிந்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, உச்சிக்குடுமியுடன் முன் வரிசையில் உட்கார்ந்து கச்சேரிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். [மேலே உள்ள படம்].
“மகாலிங்க சாமி கோயில் உற்சவத்தில் ஏராளமா கச்சேரி கேட்டிருக்கிறேன். ஆறு நாகசுரம், 12 தவில் சேர்ந்து மல்லாரி வாசிப்பார்கள். அப்படியே காது நிறைந்து விடும். திருவாவடுதுறை இராஜரத்தினம் கேட்டிருக்கிறேன். அவர் மாதிரி யாரும் வாசிக்க முடியாது. வேதாரண்யம் வேதமூர்த்தி கேட்டிருக்கீங்களா? அற்புதமா இருக்கும். நானே நாகசுரத்துக்கு வயலின் வாசிச்சிருக்கேன்,” என்று பேசிக் கொண்டே மகிழ்ச்சியில் திளைத்தார் இராமச்சந்திரராவ்.
“உங்களுக்கு கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்காரைத் தெரியுமா?”
“நானும் அவரும் டைரக்டர் சுப்பிரமணியதின் ஸ்டுடியோவில் ஒன்றாக வேலை பார்த்திருக்கிறோம்,” என்றார் ராமச்சந்திரராவ். அவர் தொடக்கத்தில் படித்தது எல்லாம் மயிலாப்பூர் பி.எஸ். பள்ளியில்தான்.
“சகாராமராவுக்கு பெரிய மீசை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையா?” என்றோம்.
“ஆமா ஆமா. அவர் என்னை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது அவருடைய மீசையைப் பிடித்து இழுப்பேனாம். டேய் ஹரி இவன் மீசையைப் பிடிச்சு இழுக்கிறாண்டா என்று இறக்கி விட்டு விடுவாராம்,” சிரித்துக் கொண்டே சொன்னார்.
“உங்கக்கிட்ட ஏதாவது சகாராமராவ் படம் இருக்கா?”
“நிறைய படம் இருக்கு சார். எனக்கு உடம்பு முடியல. எல்லாம் மூட்டை கட்டிப் போட்டிருக்கிறேன்” என்றார்.
பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் வீட்டுக்குள் புகுந்து ஒரு புகைப்படத்துடன் வந்தார். ஆனால் அதற்கு சட்டமோ, கண்ணாடியோ இல்லை.
photo-2
அப்படத்தில் நடுநாயகமாக மதுரை புஷ்பவனம் உட்கார்ந்திருக்கிறார். ஒரு பக்கத்தில் பீட்டில்ஸ் ஹாரிசன் போல் தலைமுடியை வளர்த்துக் கொண்டு, அடர்ந்த மீசையுடன் கோட்டுவாத்தியத்துடன் இருக்கிறார் சகாராமராவ். மிருதங்கம் கும்பகோணம் அழகியநம்பியா பிள்ளை ஒரு பக்கமும், திருக்கோடிக்காவல் வயலின் வித்வான் இராமசாமி ஐயர் இன்னொரு பக்கமும் இருக்கிறார்கள். [மேலே உள்ள படம்].
“மத்தவா பேரு எனக்கு ஞாபகத்துக்கு வரலை. எனக்கு காது கேட்க மாட்டேங்குது. வயலின் வாசிக்கறதை நிறுத்தியாச்சு. பொண்ணுக்கு உடம்பு சரியில்லை. அவளை நான்தான் பார்த்துக்கிறேன். மகாதான தெருவில் இருந்த வீட்டை வித்தாச்சு. பணத்தை பாங்கிலே போட்டு, வட்டியை வாங்கி, மூணு வேளையும் கடையில வாங்கி சாப்பிட்டுட்டு காலத்தை ஒட்டுறேன்,” என்றார்.
சற்று நிறுத்தி விட்டு, வீட்டின் உள்ளே உற்றுப்பார்த்தார்.
“எம் பொண்ணும் நல்லா வயலின் வாசிப்பா சார்”
மறுபடியும் வீட்டுக்கு உள்ளே போனார். இப்போது ஒரு வண்ணப்புகைப்படம் அவர் கையில். ராமச்சந்திரராவும் அவருடைய பொண்ணும் சேர்ந்து வயலின் வாசிக்கும் படம். படத்தை உற்றுப்பார்த்து விட்டு, வீட்டுக்கு உள்ள பாயில் கிடக்கும் மகளையும் உற்றுப் பார்த்தார். ஒரு மாபெரும் சோகம் நம்மைக் கவ்விக் கொண்டது.
“உங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா”
“எல்லோரும் போய் சேர்ந்தாச்சு. எல்லோருக்குமா சேர்த்து இப்ப வருசத்துக்கு 10 திவசம் கொடுக்கிறேன்”

No comments:

Post a Comment