Sunday, February 27, 2011

Kadhar Venkatta

See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------
முதன்முதலாக TDR  TIMES -க்கு கட்டுரை எழுதினேன்.
 
திருவிடைமருதுரின் வாழ்ந்த, எனது நினைவுகளில்  அப்பொழுது வந்த  தியாகிகளை பற்றி...... 
 
நினைவில் வராத தியாகிகள் மேலும் பலரும் உண்டு......
 
அன்று நான் எழுதியது  இண்டுஜுவல் சாரின்  ஊக்குவிப்பால்.
 
இன்று மீண்டும் எழுத வேண்டிய கட்டாயம் .....

ஒரு பெரிய தியாகியின் மறைவால்.........

ஆம்..... வேப்பத்தூர் தியாகி கதர் வெங்கட்டா என்ற கதர் வெங்கட்ராம  அய்யர் காலமாகிவிட்டார் 
 தனது பால பருவத்தில் வ உ  சி தலைமையில் திலகர் அணியில் இருந்த கதர் வெங்கட்டா,   வவுசி மறைவுக்கு பின்னர் காந்தியின் அணியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றார்.

அருணா ஆசப் அலி புனேயில் கலெக்டர் அலுவலகத்தில் நடு இரவில் மூவர்ண கோடி ஏற்றி கைதானார்.

கதர் வெங்கட்டா திருவிடைமருதூரில் துணை தாசில்தார் அலுவலகத்தில் மூவர்ண கொடி ஏற்றி கைதானார்.

1931 - ல்  மகாத்மா காந்தியின் அழைப்புக்கிங்க காங்கிரஸ் தொண்டர்கள் ஹரிஜன மக்களை  வீட்டிற்கு அழைத்தனர்.
வேங்கட்டாவும் அதையே செய்தார்.

1931  முதல் 36  வரை அவரது குடும்பம் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டது.

1931 முதல் 1944  வரையிலான கால கட்டங்களில் வெள்ளையைனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கோவை, அலிப்பூர், பெல்லாரி, வேலூர் பவானி உள்ளிட்ட சிறைகளில் சிறைவாசம்.

1944  - ல் வார்தா சென்று 15 நாள் தங்கியிருந்த வெங்கட்டாவிடம் மகாத்மா ஒருநாள் மாலையில் பிரார்த்தனை முடிந்தவுடன் 



நீ உயர் ஜாதி தானே 
வசதியான  குடும்பதிலிருந்துதானே வந்திருக்கே
விடுதலை போராட்டத்திற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்
ஊருக்கு திரும்பியதும் ஹரிஜன சேவை தொடங்கு..... இல்லையேல் மத மாற்றம் தான் நடக்கும்
கண்டிப்பாக, உனது பகுதியில் கதர் துணி நெய்து கதர் பிரச்சாரம் செய்
அதுவே என்னுடைய விருப்பம் என்று ஆணை இட்டார்.

தனது வாழ்நாளின் கடைசி வரையிலும் காந்திஜியின் கட்டளையை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்தார் கதர் வெங்கட்ராம  அய்யர் அதனால்தான் அவருக்கு கதர் வெங்கட்டா பெயரும் வந்தது.

 ஊருக்கு திரும்பினார். ....தனக்கு இருந்த நிலங்கள்  80 ஏக்கரில் 8  ஏக்கரை  மனைவிடமும் மகன்களிடமும் கொடுத்து இனி குடும்ப நிர்வாகத்தை அவர்களையே    நிர்வகிக்க சொன்னார்.

வேப்பதுரில் தனக்கு இருந்த 2  ஏக்கர் திடலை அதனை ஒட்டியிருந்த ஹரிஜன மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார்.  தெருவின் பெயரே ......வெங்கட்டா  தெருவானது.

மீதி 70 ஏக்கர் நிலத்தையும் விற்று பை நிறைய பணத்துடன் சென்னைக்கு சென்று அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜாஜி முன்பாக நின்று காந்திஜி இட்ட கட்டளையை கூறினார்.

ராஜாஜி கூறிய அறிவுரையின் பேரில் அங்கிருந்து திருச்செங்கோடு ஆசிரமத்தில் வாசம் செய்ய தொடங்கினார்.

ஒரே ஒரு நரிக்குறவ இனத்தை சேர்ந்த சிறுவனுடன் தொடங்கிய   திருச்செங்கோடு  விடுதியில்   இன்று சில நுறு  மாணவ மாணவிகள் ...........பெரும்பாலும் ஹரிஜன சமூகத்தை சேர்ந்தவர்கள்

அந்த நாளில் திருசெங்கோட்டில்   அவரது வீடு சத்திரம் போல் இருக்கும். அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் சித்தரஞ்சன்தாஸ், பாபு ராஜெந்திரப்ரசாத், ராஜாஜி, அருணா ஆசாப் அலி, கிருபளானி  காமராஜர், பெரியார் போன்றவர்கள் அவரது வீட்டில் வாசம் செய்திருக்கிறார்கள்  .

ஆனால் அவரது செயல்பாடு அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்டது.

தினமும் கதர் துணியை தலையில் சுமந்துகொண்டு தெரு தெருத்தெருவாக விற்பனை செய்வார். திரும்பியவுடன் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் ஹரிஜன மக்கள், கைவிடப்பட்டோர், முதியவர்கள்  ஊனமுற்றோர்  அனாதைகளுக்கு அவரவர் திறனுக்கு ஏற்ப வேலை.  இப்படியே அவரது வாழ்க்கை.

நகர்மயமான திருசெங்கோட்டில் பஸ்ஸிலிருந்து இறங்கி கதர் அய்யரு வீடு   எங்கே என சின்னக்     குழந்தையை  கேட்டால் கூட அவரது விட்டுக்கு அழைத்து சென்றுவிடும். சுற்று வட்டார பகுதிகளில் அவருக்கு அவ்வளவு பெயர், மதிப்பு, மரியாதை

சுக துக்கம் எதுவானாலும் அழைப்பு வந்துவிடும் அவர் அங்கேயே இருப்பார்.

சுதந்திரத்திற்கு பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த பின்னரும்
அவரை எப்படியாவது திருவிடைமருதுருக்கு அழைத்துவரும்படி எனது தகப்பனாரை திரு. தியாகராஜ அய்யர் (விஜி அப்பா ) 1972 ஆம் ஆண்டு கேட்டுக்கொண்டார்.

சுதந்திர தின வெள்ளி விழா 1972  ஆண்டு திருவிடைமருதூரில் மிக சிறப்பாக திரு. தியாகராஜ அய்யர் ஏற்பாடு செய்திருந்தார்
 
ஒரு மாபெரும் ஊர்வலமும் ஏற்பாடானது. 
 
அதாவது காந்தி சிலையில் தியாகி அணைக்கரை மஜீத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும்  காந்தி சிலையிலே ஊர்வலம் முடிந்தது.
 
அன்று கதர் வெங்கட்டா அவர்கள் நிண்ட நாட்களுக்கு பின்னர் சிறப்புரை ஆற்றினார்.  அங்கு பின்னர்  திருவிடைமருதூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த சுமார் 100  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கதர் மாலைகளை  அணிவித்திவிட்டு
தியாகிகள் குடும்பத்தினர்கள் கூட தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிய வேண்டும் என்று வலியுறித்தினார். 

தனது கடைசி கால கட்டத்தில் கதர் வெங்கட்டா மீண்டும் குடும்பத்தில் வந்து இணைந்தார்.
  
அதிகாலை அவர் காலமான செய்தி எனக்கு வந்தது. மறைவு சேதி கேட்டு அவரது இல்லத்திற்கு சென்றேன்.

 அவரது பூத பார்த்த உடன்  எனக்கு  சோழ   சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை இறந்து கிடப்பது போல் உள் மனதில் ஒரு எண்ணம்

உறவினர்களையும் சேர்த்து சுமார் ஒரு 20  பேர் இருந்தனர்.

பொதுவாக 90 வயது தாண்டியவர் மரணத்திற்காக  அவ்வளவாக அழமாட்டார்கள். 

ஆனால் கதர் வெங்கட்டாவின் சடலம் கிடத்தி வைக்க பட்டிருந்த  போது ஒரே ஒரு பெண் மட்டும் கடைசி வரை கதறி அழுது கொண்டிருந்தாள்

அவள் வெங்கட்டா அய்யருக்கு பணிவிடை செய்து வந்த ஹரிஜன பெண்.

 1921 - ல் மகாகவி பாரதி மறைந்த போதும் மிக குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்ததுடன் நினைவு கூறப்படும் ஒரு வரலாற்று  செய்தி.
 
வரலாறும்..... இந்த சமுதாயமும் மறக்ககூடாத...,  ஆனால் மறந்துவிட்ட எத்தனையோ விடுதலை போராட்ட தியாகிகளில் கதர் வேங்கட்டாவும் ஒருவராகிவிட்டார் என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.

இன்று இந்தியாயிலேயே கையெடுத்து கும்பிடகூடிய தியாகிகள் தற்போது குறைவு

ஆடம்பரத்திலும் சுய நலத்திலும் விளம்பரத்திலும் உள்ள இந்த கால கட்டத்தில் காலாவதியாகிப்போன ஒரு தியாகியின் சாவுக்கு செல்வதில் என்ன ஆகி விடபோகிறது.

ஆனால் ஒன்று........ இப்படியாகிவிட்ட இந்த சமுகத்திலிருந்து மீண்டும் ஒரு கதர் வெங்கட்டா போன்ற ஒரு தியாகி உருவாகமுடியுமா.,.....
 
காத்திருப்போம்   ......கனவு நனவாகும்
 
பாரதி போல்
 
  கனவு மெய்ப்படவேண்டும்!
        கைவசமாவது எளிதில்வேண்டும்!
               என்று நினைவில் கொண்டு
                            மனதில் உறுதியோடு!
 

G Sridhar 
S/o Ganesan Sir

 

No comments:

Post a Comment